Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ துணை முதல்வராகிறார் உதயநிதி?: சில அமைச்சர்களுக்கும் 'கல்தா'

துணை முதல்வராகிறார் உதயநிதி?: சில அமைச்சர்களுக்கும் 'கல்தா'

துணை முதல்வராகிறார் உதயநிதி?: சில அமைச்சர்களுக்கும் 'கல்தா'

துணை முதல்வராகிறார் உதயநிதி?: சில அமைச்சர்களுக்கும் 'கல்தா'

ADDED : ஜூலை 08, 2024 02:55 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்து, இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கு முன் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும்; லோக்சபா தேர்தலில் கட்சித் தலைமை எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாத சில அமைச்சர்களின் இலாகாக்களை பறிக்கவும், தி.மு.க., தலைமை ஆலோசித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜன., 21ல், சேலத்தில், தி.மு.க., இளைஞரணி மாநில மாநாடு நடந்தது. மாநாடு முடிந்ததும், அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. லோக்சபா தேர்தலுக்கு முன், துணை முதல்வர் பதவி வழங்கினால், அதுவே, எதிர்கட்சிகளின் வாரிசு அரசியல் பிரசாரத்திற்கு வழிவகுத்துவிடும் என்று, மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

இதனால், 'துணை முதல்வர் பதவி என்பது வதந்தி' என்று, ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, 'முதல்வருக்கு துணையாக எல்லா அமைச்சர்களும் இருக்கப்போகிறோம்; எனக்கு துணை முதல்வர் பதவி தருவது குறித்து, முதல்வர் தான் முடிவு செய்வார்' என்று, உதயநிதி கூறினார்.

லோக்சபா தேர்தலுக்கு முன், சனாதனம் விவகாரம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசினார். இதற்கு, வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர்மீது, சில மாநிலங்களின் வழக்குகள் பதிவானது.

லோக்சபா தேர்தலில், தமிழகம் முழுதும் உதயநிதி சுற்றுபயணம் செய்து, தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். தி.மு.க., கூட்டணி கட்சிகள், 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும், மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமையவில்லை.

கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், உடனே உதயநிதியை துணை முதல்வராக்க, ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். சனாதனம் தொடர்பான வழக்குகளில், சட்ட ரீதியான சில நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருந்ததால், துணை முதல்வர் பதவியை தர, தி.மு.க., தலைமை முன்வரவில்லை.

முதல்வர் ஸ்டாலின் இம்மாதம் இறுதி வாரத்தில் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார். அங்கு, அதிக நாட்கள் தங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், முதல்வர் பணிகளை கவனிக்கும்விதமாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில், எந்தந்த தொகுதிகளில் தி.மு.க.,வுக்கு ஓட்டு சதவீதம் குறைந்ததோ; அந்தந்த தொகுதிகளுக்கு பொறுப்பேற்ற அமைச்சர்களின் இலாகாக்களை பறிக்கவும் தி.மு.க., தலைமை ஆலோசித்துள்ளது. சில மூத்த அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்பட்சத்தில், அவர்கள் அமைச்சர் பதவியை இழக்க நேரும்.

மேலும், மூத்த அமைச்சர்கள் சிலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால், அவர்களிடம் இருந்து பொறுப்புகளைப் பறித்து, உதயநிதியின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப செயல்படும் அமைச்சர்களிடம் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை வழங்கவும், அமைச்சர்கள் மாற்றம்; இலாகாக்கள் மாற்றம் செய்யவும் வாய்ப்புள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us