லோக்சபாவில் காலர் துாக்கும் காங்.,; ராஜ்யசபாவில் தலைக்கு மேல் கத்தி
லோக்சபாவில் காலர் துாக்கும் காங்.,; ராஜ்யசபாவில் தலைக்கு மேல் கத்தி
லோக்சபாவில் காலர் துாக்கும் காங்.,; ராஜ்யசபாவில் தலைக்கு மேல் கத்தி
UPDATED : ஜூன் 12, 2024 05:37 PM
ADDED : ஜூன் 12, 2024 01:02 AM

லோக்சபாவில், 10 ஆண்டுகளுக்கு பின் எதிர்க்கட்சி தலைவர் பதவி பெற்றுள்ள காங்., ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
லோக்சபாவில் மொத்தமுள்ள 543 இடங்களில், 10 சதவீதம் அதாவது 54 இடங்களில் வெற்றி பெறும் கட்சிக்கே, எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கும்.
பிரச்னை இல்லை
கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி முறையே 44, 52 இடங்களை மட்டுமே பெற்றதால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தது.
இந்த முறை, 99 இடங்களில் காங்., வெற்றி பெற்றுள்ளதால், எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது.
ராஜ்யசபாவில் மொத்தமுள்ள, 245 இடங்களில், காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்.பி.,க்கள் உள்ளனர். 10 சதவீதத்தை நிறைவு செய்து, மூன்று எம்.பி.,க்கள் கூடுதலாகவும் உள்ளதால், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தற்போது பதவி வகித்து வருகிறார்.
இந்த சபை எம்.பி.,க்களான திக்விஜய் சிங், கே.சி.வேணுகோபால், தீபேந்தர் ஹூடா ஆகியோர், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டனர்.
இதில், திக்விஜய் சிங்கை தவிர மற்ற இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் லோக்சபாவுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து இருப்பதால், ராஜ்யசபாவில் காங்., பலம் 26 ஆக குறையும். இப்போதைக்கு காங்கிரசுக்கு பிரச்னை இல்லை.
பின்னடைவு
ஆனால், கேரளாவில் உள்ள மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்க இன்னும் ஓராண்டு உள்ளது. அப்படியே தேர்தல் நடந்தாலும், அந்த இடங்களை பெறும் பலம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. கே.சி.வேணுகோபால் ராஜஸ்தானில் இருந்தும், தீ பேந்தர் ஹூடா ஹரியானாவில் இருந்தும் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அங்கு மீண்டும் இடைத்தேர்தல் நடந்தால், அந்த இடங்களை மீண்டும் பெறும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியிடம் பலம் இல்லை.
எனவே, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது காங்கிரஸ் தலை மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியாகவே உள்ளது.
சோனியா ராஜ்யசபா எம்.பி.,யாகி உள்ள இந்த நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை அவர்கள் இழக்க நேரிட்டால், அது மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படும்.
வரும் நாட்களில், இருக்கும் 26 எம்.பி.,க்களின் பலத்தை காங்., இழந்தால், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை மல்லிகார்ஜுன கார்கே இழக்க நேரிடும் என்பது அக்கட்சிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -