'நீட்' தேர்வில் அதிகரிக்கும் தமிழக மாணவர் தேர்ச்சி
'நீட்' தேர்வில் அதிகரிக்கும் தமிழக மாணவர் தேர்ச்சி
'நீட்' தேர்வில் அதிகரிக்கும் தமிழக மாணவர் தேர்ச்சி
ADDED : ஜூன் 06, 2024 04:36 AM

சென்னை: மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வில், தமிழகத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, 11,000 அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு மே 5ல் நடந்த நீட் தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் மாலை வெளியாகின. இதில், கடந்த ஆண்டை விட அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களில், 7 பேர் தமிழக மாணவர்கள்.
தேசிய அளவில் கடந்த ஆண்டு, 11.46 லட்சம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 1.70 லட்சம் பேர் கூடுதலாக, 13.16 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் தேர்ச்சி கடந்த ஆண்டில், 6.56 லட்சமாக இருந்தது; இந்த ஆண்டு, 7.69 லட்சமாக அதிகரித்துள்ளது.
மாணவர்களில் கடந்த ஆண்டில், 4.90 லட்சம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 5.47 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில், 3 திருநங்கையர் தேர்ச்சி பெற்றனர்; இந்த ஆண்டு, 10 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர், 6.19 லட்சம்; பட்டியலினம், 1.78 லட்சம்; பழங்குடியினர், 68,479; பொது பிரிவு, 3.34 லட்சம்; பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவில், 1.16 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என, தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தேர்வை தமிழில் எழுதுவோரின் எண்ணிக்கையும், 5 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2020ல், 17,101; 2021ல், 19,868; 2022ல், 31,965; 2023ல், 30,536; 2024ல், 36,333 பேர் தமிழ் வழியில் நீட் தேர்வை எழுதியுள்ளனர். தமிழக மாணவர்கள் பிற மாநில மாணவர்களுக்கு போட்டியாக, இந்த ஆண்டு அதிக தேர்ச்சி பெற்றுள்ளதுடன், முன்னிலை பட்டியலில் அதிக அளவில் இடம் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.