தமிழகத்தில் அடுத்த மாதம் மின் கட்டணம் உயர்கிறது
தமிழகத்தில் அடுத்த மாதம் மின் கட்டணம் உயர்கிறது
தமிழகத்தில் அடுத்த மாதம் மின் கட்டணம் உயர்கிறது
ADDED : ஜூன் 06, 2024 12:48 AM

சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் கட்டணம், 6 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.
தமிழக மின் வாரியம், 1.60 லட்சம் கோடி ரூபாய் கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதையடுத்து, 2022 செப்., 10ல் மின் கட்டணம், 30 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டது. இது தொடர்பான ஆணையில், 2022 - 23 முதல் 2026 - 27 வரை, ஐந்து ஆண்டுகளுக்கு மின் கட்டணம் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த 2022 - 23ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 6 சதவீதம் அல்லது ஏப்., மாத பணவீக்க விகிதம் என, இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.
கடந்த 2023 ஜூலை முதல், 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை, தமிழக அரசு ஏற்றது. வணிக வளாகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டும், 1 யூனிட்டிற்கு 13 காசு முதல், 21 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
கடந்த 2022ல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி, நடப்பு நிதியாண்டுக்கான கட்டணம், அடுத்த மாதம் முதல் உயர்த்தப்பட உள்ளது.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அடுத்த மாதம் முதல், 6 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால், அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.