குற்றாலம் சித்திரசபையில் பேசும் சித்திரங்கள்
குற்றாலம் சித்திரசபையில் பேசும் சித்திரங்கள்
குற்றாலம் சித்திரசபையில் பேசும் சித்திரங்கள்
UPDATED : ஜூன் 16, 2024 04:11 AM
ADDED : ஜூன் 16, 2024 01:08 AM

தமிழகத்தில் அமைந்துள்ள ஐந்து சிவாலயங்கள், ஐந்து திருச்சபைகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன.
சிதம்பரம் நடராசர் ஆலயம், 'கனகசபை' என்றும், திருவாலங்காடு சிவாலயம், 'ரத்தினசபை' என்றும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம், 'வெள்ளிசபை' என்றும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், 'தாமிரசபை' மற்றும் குற்றாலம் குற்றாலநாதர் கோவில், 'சித்திரசபை' என்றும் அழைக்கப்படுகின்றன.
![]() |
பொதுவாக கோவில்களில் விக்கிரக வழிபாடு தான் பிரதானமாக இருக்கும். ஆனால், சித்திர வடிவில் இறைவனை வழிபடுவது அநேகமாக இங்குமட்டுமே.
மார்கழியில் விழா
இங்கு இறைவன் ஓவியமாக காட்சிஅளிக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம், இந்த சபையில் நடைபெற்றதாக திருப்பத்துார் புராணம் கூறுகிறது.
சித்திரசபையில் நடராஜ பெருமான் தேவியருடன் எழுந்தருளி இருக்கிறார். மார்கழி மாதம் திருவாதிரை விழா இங்கு விமரிசையாக நடைபெறும்.
![]() |
சபையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியை கண்டு, பிரம்மதேவன் ஆதி சிவனின் சொரூபங்களை சுவரில் எழுதிவைத்தார். அதனால், வியாசர் முதலியோர் இதை சித்திரசபை என்று அழைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
சித்திரசபையானது, குற்றாலநாதர் கோவிலுக்கு அருகே தனிக்கோவிலாக உள்ளது.
சபையின் உட்சுவரில் துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடல் புராண வரலாறுகள்.
அறுபத்து மூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகவான் போன்றவை, அழியாத மூலிகை ஓவிய வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன.
அதிலும், சிவபெருமான் திருநடனம் புரியும் காட்சிக்கு கொடுக்கப்பட்ட வண்ணங்கள், எந்த வகை மூலிகையில் இருந்து கிடைத்தது என்பதை அறியும் ஆவலை துாண்டுகின்றன.
![]() |
விஷ்ணு கோவில்
நேற்று தான் தீட்டியது போன்ற பொலிவுடன் காணப்படும், இந்த ஓவியங்கள் வரைந்து பல நுாறு ஆண்டுகள் இருக்கலாம் என்பதுதான் இதன் ஆச்சரியம்.
மேலும், இன்று நாம் காணும் குற்றாலநாதர் கோவிலானது ஒரு காலத்தில் விஷ்ணு கோவிலாக இருந்தது.
அதை அகத்திய மாமுனிவர் தான் சிவத்தலமாக மாற்றி அமைத்தார், விஷ்ணுவின் சிரசில் கைவைத்து, 'குறு குறு குற்றாலநாதா' என்று சொல்லி அழுத்த, விஷ்ணு உருவம் அகன்று சிவனின் லிங்க வடிவம் உருவானதாக புராண வரலாறு உண்டு.
இந்த வரலாற்றை சித்தரிக்கும் ஒரே ஓவியமும் இங்கு தான் இருக்கிறது.
இன்னும் இரண்டு மூன்று மாத காலத்திற்கு, திருவிழா போல குற்றால சீசனை அனுபவிக்க கூட்டம் கூட்டமாக செல்பவர்கள், நம் பழமையும் பெருமையும் பேசும், இந்த சித்திரசபையையும் எட்டிப்பார்த்து வரலாம்.
- நமது நிருபர் -