பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு வேலையில்லை: சுப்பிரமணிய சுவாமி
பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு வேலையில்லை: சுப்பிரமணிய சுவாமி
பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு வேலையில்லை: சுப்பிரமணிய சுவாமி
UPDATED : ஜூன் 05, 2024 03:23 AM
ADDED : ஜூன் 05, 2024 02:12 AM

''பத்தாண்டு கால பா.ஜ., ஆட்சி மக்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. அதனாலேயே, பா.ஜ.,வை இந்த தேர்தலில் பெரிய அளவில் மக்கள் புறக்கணித்துள்ளனர்.
''இனியாவது, பா.ஜ.,வினர் தங்களுடைய தவறுகளை உணர்ந்து, நல்லாட்சி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி கூறினார்.
நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில் ஜனநாயகரீதியிலான ஆட்சியை பிரதமர் மோடி வழங்கவில்லை. பா.ஜ.,வை பொறுத்தவரை, அக்கட்சியின் அடிநாதமே ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் தான்.
ஒரு தேசத்தை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை கொள்கைகளோடு செயல்படும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவு போலத் தான் பா.ஜ., இருக்கிறது.
அதிகாரம்@@
பா.ஜ.,வின் எல்லா செயல்பாடுகளுக்கும் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் வழிகாட்டல்கள் இருக்கும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், 2014ல் அதே ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் உழைப்பு மற்றும் செயல்பாடுகளை மூலதனமாக வைத்து வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பா.ஜ., மற்றும் தலைவர்கள் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறின.
பல விஷயங்களில் அடிப்படை சித்தாந்தங்களில் இருந்து விலகிச் சென்று, தன்னிச்சையாக ஆட்சி அதிகாரத்தை செலுத்தினார் பிரதமர் மோடி. இந்த விஷயங்களை நான் அவரிடம் நேரிடையாகவே எடுத்துச் சொன்னேன்; அவர் கண்டுகொள்ளவில்லை.
நான் அடிமையில்லை
நல்ல விஷயங்களை சொல்லும் என்னை அவருக்கு பிடிக்கவில்லை. அவருக்காக என்னுடைய கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக்கொள்ள, மற்றவர்களை போல யாருக்கும் நான் அடிமையில்லை.
ஒரு கட்டத்தில் ஆட்சி அதிகாரச் செயல்பாடுகளில் இருக்கும் தவறுகளை, பொது வெளியில் விமர்சித்தேன். அப்போதாவது, தங்கள் போக்கை திருத்திக் கொள்வார் என்று நினைத்தேன்; செய்யவில்லை.
அதன்பின், இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து ஆகப் போவதில்லை என முடிவெடுத்து, தன்னிச்சையாக செயல்பட்டேன். என்னைப் போலவே, பா.ஜ., ஆட்சி சிறப்பான மக்களாட்சியாக செயல்பட வேண்டும் என்று விரும்பிய பலருக்கும், மோடி தொடர்ந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
எந்த அமைப்பையும்,அதன் செயல்பாடுகளையும் அச்சாணியாக வைத்து, ஆட்சி அதிகாரத்துக்கு மோடி வந்தாரோ, அவர்களையும் புறக்கணிக்கத் துவங்கிய பின், அவர்களும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்தனர்.
இருந்தாலும், பா.ஜ., ஆட்சியை எந்த இடத்திலும் அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. பிரசாரத்தின் போதே, மோடிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான், தேவையில்லாத பல விஷயங்களை பிரசாரத்தின் போது பேசினார். கடைசி கட்ட தேர்தல் முடிவதற்கு முன்னதாகவே, கன்னியாகுமரி சென்று தியானம் செய்தார்.
இனி பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு வாய்ப்பில்லை. ஆர்.எஸ்.எஸ்., விருப்பப்படியே எல்லாமே நடக்கப் போகிறது. மோடியை தவிர, யார் தலைமையிலான ஆட்சி என்றாலும், அது சிறப்பாகத்தான் இருக்கும். அந்த ஆட்சியில் என்னுடைய பங்கும் வெகுவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -