வானகரத்தில் மெத்தனால் வாங்கி சில்லரை சில்லரையாக விற்ற மிதுன்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்
வானகரத்தில் மெத்தனால் வாங்கி சில்லரை சில்லரையாக விற்ற மிதுன்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்
வானகரத்தில் மெத்தனால் வாங்கி சில்லரை சில்லரையாக விற்ற மிதுன்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ADDED : ஜூன் 22, 2024 05:20 AM

கள்ளக்குறிச்சியில் இரு நாட்களுக்கு முன் கள்ளச்சாராயம் என்ற பெயரில் மெத்தனால் விஷச்சாராயத்தை விற்பனை செய்த கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜை, போலீசார் கைது செய்துள்ளனர். அவரது மனைவி விஜயா, தம்பி தாமோதரன் ஆகியோரிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர்.
அப்போது போலீசாரிடம் கோவிந்தராஜ் கூறியதாவது:
எத்தனையோ முறை போலீஸ் புடிச்சிட்டுப் போயிருக்காங்க. பெரிய அளவில் சிக்கல்கள் எதுவும் இல்லாததால், கொஞ்ச நாளில் ஜெயிலில் இருந்து வெளியே வந்துடுவேன். பின், அதே தொழிலை தொடர்வேன்.
கள்ளக்குறிச்சிக்கு பக்கத்துல இருக்கும் மலைப் பகுதிகளில், நிறைய பேர் சாராயம் காய்ச்சுறாங்க. அவங்க கிட்ட இருந்து தான் சரக்கு வாங்கிட்டு வருவேன். சின்னதுரையிடம் இருந்து தான், பெரும்பாலும் வாங்குவேன். அவர்கிட்ட சரக்கு இல்லை என்றால், ஜோசப் ராஜுவிடம் வாங்குவேன்.
சின்னதுரை சரக்கில் போதை கொஞ்சம் அதிகமா இருக்கும். என் முதல் விருப்பம் சின்னதுரை தான். அப்படித்தான், மூன்று, 'டியூப்'களில் சில நாட்களுக்கு முன் சரக்கு வாங்கிக்கிட்டு வந்தேன்.
வழக்கம்போலத் தான் விற்றேன். போதை ஏறலை என சிலர் புகார் சொன்னாங்க. அதுனால, அடுத்தடுத்து கொண்டு வரப்பட்ட சரக்குகளை, அதிக அளவில் தண்ணி கலக்காமல் பார்த்துக் கொண்டேன். அன்றைய தினம், சின்னதுரையிடம் இருந்து ஐந்து டியூப்களில் வாங்கின சரக்குகளை விற்றேன்.
தண்ணீர் கலக்கப்பட்ட சரக்கு வேண்டாம் என பலரும் சொன்னதால், அதிக அளவில் தண்ணீர் கலக்காமல் வாங்கி வந்த சரக்குகளை விற்றுத் தீர்த்தேன். என் சரக்கு என்றால், இந்த பகுதியில் மக்களுக்கு ஈர்ப்பு என்பதால், நிறைய ஆண்களும், பெண்களும் சரக்கு வாங்கி சாப்பிட்டனர்.
அதில் பலருக்கும் வாந்தி, பேதி, மயக்கம், மூச்சுத் திண்றல் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிதாபமா இறந்து விட்டனர். சத்தியமா யாரையும் கொல்ல வேண்டும் என சரக்கு விற்கவில்லை. கள்ளச்சாராயம் என சொல்லிதான், ஐந்து கார் டியூப்களில், மலையில இருந்து தம்பி தாமோதரன் எடுத்துட்டு வந்தான்; நானும் வித்துட்டேன்.
ஆனா, வித்தது மெத்தனால்னு சொல்றாங்க. இவ்வளவு வீரியமா இருந்து, குடிச்சவங்க பலரையும் காலி பண்ணும்னு தெரியாது.
சின்னதுரைக்கு பெரிய அரசியல் செல்வாக்கு இருக்கலாம். எனக்கும் எல்லா அரசியல் கட்சிகள்லயும் ஆட்கள் உள்ளனர். அவ்வவ்போது கட்சிக்காரங்களை போய் பார்த்துட்டு வருவேன். எனக்கு ஏதும் பிரச்னை என்றால் உதவி செய்வர். எல்லா போலீசுக்கும் வழக்கமான மாமூல் கொடுத்துடுவேன்.
தேவைப்படும் போது போலீஸ் என்னை பிடிச்சுட்டுப் போய்டும். அப்புறம் பெயிலில் வந்துடுவேன். வழக்கமாக தொழிலை தொடர்வேன். மலையில இருந்து வாங்கிட்டு வந்த ஐந்து டியூப் சரக்குல, ரெண்டு டியூப் சரக்கு முழுசையும் வித்துட்டேன். ரெண்டு டியூப் சரக்கை, போலீசார் எடுத்துட்டு போய்ட்டாங்க; ஒரு டியூப் சரக்கு எங்கே என தெரியலை.
ஒரு டியூபில், 60 லிட்டர் சரக்கு இருக்கும். அதை வைத்து தான் 1,000 பாக்கெட் சாராயம் தயார் செஞ்சு விற்பேன். ஒரு நாளைக்கே, 1,000 பாக்கெட் வரை விற்றுவிடுவேன். என்னிடம் போலீசாரும் சரக்கு வாங்கி சாப்பிடுவர். இவ்வாறு கோவிந்தராஜ் கூறியதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.
கோவிந்தராஜ் வெள்ளந்தியாக போலீசாரிடம் பேசினாலும், அவர் சொல்வதில் நிறைய பொய் இருக்கக் கூடும் என நினைத்த போலீசார், சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜை பிடித்து விசாரித்தால் தான் உண்மை தெரியவரும் என முடிவெடுத்து, சின்னதுரைக்கு துணையாக இருந்து கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்ட சிலரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது தான், கருணாபுரத்துக்கு கடைசியாக எடுத்துச் செல்லப்பட்ட கள்ளச்சாராயம், மலையில் காய்ச்சப்பட்டது அல்ல என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
ஓராண்டுக்கு முன், சென்னையில் வானகரம் பகுதியில் இருந்த ஒரு தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்டது போக, மீதமிருந்த மெத்தனாலை, புதுச்சேரியைச் சேர்ந்த சிலர் வாங்கி வந்து, விற்றுள்ளனர்.
அப்படி புதுச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்ட மெத்தனாலில் பெரும்பாலான பகுதி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்துக்கும், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூருக்கும் அனுப்பப்பட்டது. அதை வாங்கிக் குடித்த 25 பேர் வரை இறந்தனர்.
புதுச்சேரியில் மிச்சமிருந்த மெத்தனாலை தான், கள்ளக்குறிச்சிக்குக் கொண்டு வந்து, கருணாபுரத்தில் விற்றுள்ளனர் என தற்போது தெரிய வந்திருக்கிறது. இப்படி மெத்தனாலை மொத்தமாக வாங்கி வந்து, அதை சில்லரை சில்லரையாக பிரித்து அனுப்பி தொழில் செய்து வந்த மிதுன் என்பவரை, போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
அவரை தீவிரமாக விசாரிக்கும்போது, போலீஸ் - அரசியல்வாதிகள், போதை பொருள் விற்பனை கும்பல் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என, போலீசார் கூறுகின்றனர்.
- நமது நிருபர் -