44 ஆண்டு தொண்டருக்கு அமைச்சர் பதவி; ஜார்ஜ் குரியனை தேர்வு செய்ததன் பின்னணி
44 ஆண்டு தொண்டருக்கு அமைச்சர் பதவி; ஜார்ஜ் குரியனை தேர்வு செய்ததன் பின்னணி
44 ஆண்டு தொண்டருக்கு அமைச்சர் பதவி; ஜார்ஜ் குரியனை தேர்வு செய்ததன் பின்னணி
ADDED : ஜூன் 13, 2024 03:14 AM

பா.ஜ.,வின் 44 ஆண்டு தொண்டருக்கு அமைச்சர் பதவி தந்து அழகுபார்த்துள்ளார் பிரதமர் மோடி. அவர் மத்திய சிறுபான்மையினர் நலன், மீன்வளம், பால்வளம், கால்நடை துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, கேரளா கோட்டயம் மாவட்டம் பாலா அருகே பிர்க்காரங்காலா என்ற கிராமத்தை சேர்ந்த ஜார்ஜ் குரியன்.
கேரள பா.ஜ.,வினரிடையே மட்டும் அறிமுகமான ஜார்ஜ் குரியன் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். 1980 ல் பா.ஜ.,துவங்கிய நாளில் அதன் உறுப்பினராக இணைந்து, 44 ஆண்டுகளாக அக்கட்சியில் தொடர்கிறார்.
எம்.ஏ., பி.எல்., படித்துள்ள இவர், பா.ஜ., மாநில பொதுச்செயலாளராகவும் உள்ளார். கோட்டயம், இடுக்கி லோக்சபா தொகுதிகளில் முன்பு போட்டியிட்டு தோற்றவர். 2016 ல் அன்றைய முதல்வர் உம்மன் சாண்டியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார். இவரை 2017 ல் தேசிய சிறுபான்மையினர் கமிஷன் துணைத்தலைவராக மோடி நியமித்தார். இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது மோடி, அமித்ஷா போன்றோரின் ஹிந்தி பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.
சீரோமலபார் சபை கத்தோலிக்க கிறிஸ்தவரான ஜார்ஜ் குரியன், கேரள பா.ஜ.,வின் 'கிறிஸ்தவ முகமாக' பார்க்கப்படுபவர். கிறிஸ்தவ சபைகளுக்கும் பா.ஜ.,வுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுபவர். பிரதமர் மோடியோடு நெருங்கி பழகும் தொண்டராக இருந்தவர். அதனால் தான் எம்.பி.,யாக இல்லாத இவரை, பதவியேற்பு நிகழ்ச்சியை பார்க்க சென்றவரை அமைச்சராக அறிவித்தார் மோடி.
நினைவுகளை பகிர்ந்த மோடி
இதுகுறித்து அமைச்சர் ஜார்ஜ் குரியன் கூறியதாவது:
பிரதமர் பதவியேற்கும் நாளில் காலையில் தான் டில்லி சென்றேன். அங்கு சென்றதும், காலை 11:30க்கு பிரதமர் அலுவலகத்திற்கு செல்லும்படி நிர்வாகி ஒருவர் கூறினார். ஒரு டாக்சி பிடித்து சென்றேன். அங்கு போட்டோ எடுத்தனர். உணவு அருந்தி மதியம் வெளியே வரும் போது தான் நான் அமைச்சராக போகிறேன் என்று தெரியும். அதனால் எனது மனைவிக்கு போனில் சொல்ல முடியவில்லை. செய்திகளை பார்த்து தான் அறிந்து கொண்டதாக மனைவி கூறினார்.
மாலையில் பதவியேற்ற பின்பு, மோடியை சந்தித்த போது, 1993 ல் அவர் யுவ மோர்ச்சா(பா.ஜ., இளைஞரணி) நிர்வாகியாக இருந்த போது, நானும் அகில இந்திய நிர்வாகியாக இருந்தேன். அதுபற்றிய மலரும் நினைவுகளை பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
நான் ஒரு கிறிஸ்தவ விசுவாசி. ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் சர்ச்சிற்கு செல்வேன். சபையில், மதத்தில் நான் கிறிஸ்தவர்; வெளியே பொதுவாழ்வில் நான் பா.ஜ., க்காரன். நான் பா.ஜ.,வை சேர்ந்தவர் என்பதற்காக என்னை சபை பாதிரியாரோ, அல்லது பிற கிறிஸ்தவர்களோ வேறுபட்டு பார்த்ததில்லை.
பா.ஜ.,வில் 44 ஆண்டுகளாகி விட்டது; இதுவரை என்னை தலைவர்களோ, தொண்டர்களோ யாரும் கிறிஸ்தவர் என்று சொன்னதோ, தனியாக அடையாளப்படுத்தியதோ இல்லை. இப்போதும் கிறிஸ்தவர் என்பதற்காக அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது என்று கட்சியினர் யாரும் என்னை சொல்லவில்லை.
கிறிஸ்தவர் ஓட்டுக்காக அல்ல
'கிறிஸ்தவ ஓட்டுக்காக செயல்படுங்கள்' என்று இத்தனை ஆண்டுகளில் கட்சி தலைமை இதுவரை என்னிடம் சொன்னதில்லை. இது எனக்கு பா.ஜ., மீதுள்ள மரியாதையை உயர்த்தியது.
நான் அமைச்சரானது கட்சியின் தேர்வு தான். எனது தேர்வு, தொண்டர்களுக்கு பா.ஜ., தந்துள்ள உயர்ந்த அங்கீகாரம். கட்சியில் யாரும் உயர் பதவிக்கு வரலாம் என்பதற்கான 'மெசேஜ்'.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக, நாட்டின் சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கு பாடுபடுவேன். மீனவர் நலன் சார்ந்த விஷயங்களில் தீவிரமாக செயல்படுவேன்.
மணிப்பூரில் இரண்டு சிறுபான்மை பிரிவினரிடையே நடக்கும் மோதலில் மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு துணை நிற்பேன்.
இவ்வாறு கூறினார்.