சிந்தனைக்களம்: விபரீதம் வரும் முன் தடுப்பது தானே அவசியம்!
சிந்தனைக்களம்: விபரீதம் வரும் முன் தடுப்பது தானே அவசியம்!
சிந்தனைக்களம்: விபரீதம் வரும் முன் தடுப்பது தானே அவசியம்!
ADDED : ஜூன் 23, 2024 05:53 AM

மது, உடலையும் உயிரையும் பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடிய ஒரு விஷயம் என்பது தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆனாலும், நண்பர்களாலும், சமூக நிகழ்வுகளின்போதும் மது அருந்தப் பழகி, படிப்படியாக அதை வார இறுதி நாட்களின் கேளிக்கையாக மாற்றி, பின் அந்தப் பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போகிறவர்கள் தான் ஏராளம். இன்னொரு தரப்பு மக்களுக்கு, மது என்பது ஒரு, சமூக அந்தஸ்துக்குரிய விஷயமாகவும் உள்ளது. பணிபுரிவோர் மத்தியில், மது விருந்து, ஒரு கவுரவ உபசரிப்பாகக் கருதப்படுகிறது.
அடித்தட்டு மக்களுக்கு மது, பெரும்பாலும் வலி நிவாரணியாக அறிமுகமாகி, அப்படியே பழக்கமாக மாறிவிடுகிறது.
'சளி பிடிப்பதை தடுக்க மருந்து போல மதுவைக் குடிக்கிறேன்; ஆஸ்துமா தொந்தரவை கட்டுப்படுத்த எப்போதாவது குடிக்கிறேன்' என்று என்னிடம் கூறியவர்களையும் நான் அறிவேன்.
'உடல் வலியைக் குறைக்க குடிக்கிறேன்; மனசோர்வை நீக்க குடிக்கிறேன்; கவலையை மறக்க குடிக்கிறேன்; சந்தோஷத்தை கொண்டாட குடிக்கிறேன்; விழாவை சிறப்பிக்க குடிக்கிறேன்' என்று குடிப்பவர்கள் ஏதாவது ஒரு காரணத்துடன் குடிக்க ஆரம்பிக்கின்றனர்; போகப்போக குடிப்பதற்காகவே காரணத்தை தேடும் நிலைக்கு வந்து விடுகின்றனர். நாளடைவில் மது மட்டுமே வாழ்க்கை, ஆகாரம் என்றாகி விடுகிறது. இறுதியில் உயிரையே விடுகின்றனர்.
மது தேவை என்ற நிலையில் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், அதற்கான செலவை செய்ய இயலாத சூழ்நிலையில்தான், மலிவு விலை சாராயத்தைத் தேடி ஓடுகின்றனர்.
பாட்டிலுக்கு எக்ஸ்ட்ரா 10 ரூபாய்; கூட வரும் நண்பர்களுக்கு, 'கட்டிங்' பகிர்வு, மது விலையின் உயர்வு போன்ற காரணங்களால், மலிவு விலை மதுவை நாடும் போது, இந்தக் கள்ளச்சாராயம் அவர்களுக்கு கை கொடுக்கிறது.
கள்ளச்சாராய வியாபாரிகள் பெரும்பாலும், அரசியல்மற்றும் அதிகாரத்தில் உள்ள சிலருடன் தொடர்பில் இருப்பதால், வெளிப்படையாக இல்லாமல் ஒரு நிழல் வியாபாரமாக, மறைவிடங்களில் இந்த வியாபாரத்தை செய்ய ஆரம்பிக்கின்றனர்.
பழங்களை அழுக வைத்து ஊறல் போட்டு, அதிலிருந்து சாராயம் காய்ச்சும் முறை ஒன்று இருந்தது. அதற்கு வேலை அதிகம், கூலி ஆட்கள் தேவை, தயாரிப்பு காலம் அதிகமாக இருக்கும். அதையெல்லாம் கருத்தில் கொண்டு செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்க இப்போது, ரசாயனத்தை தண்ணீரில் கலந்து சாராயமாக விற்க ஆரம்பித்து விட்டனர்.
இது அவர்களுக்கு வேலைப்பளுவை குறைப்பதோடு தயாரிப்பு நாட்களையும், மனித வள தேவைகளையும் வெகுவாகக் குறைத்து லாபத்தை அள்ளிக் கொடுக்கிறது.
கள்ளச்சாராய வியாபாரிகளிடையே போட்டியும் உண்டு. யாருடைய கள்ளச்சாராயம் தரமாக இருக்கிறது என்பதல்ல போட்டி; யாருடைய சாராயம் போதை அதிகமாக தருகிறது, யாருடைய சாராயம் போதையை விரைவில் தருகிறது என்றெல்லாம், 'ரேட்டிங்' போடுகின்றனர்.
இதனால், கள்ள மது தயாரிப்பில் ரசாயனத்துடன் கலக்கக்கூடிய தண்ணீர் அளவை குறைத்து, ரசாயனத்தின் அளவை அதிகரித்து அவர்கள் தயாரிக்கும் அந்த போலி மது தான், குடிப்பவர்களின் உயிரைக் குடிக்கும் எமன் ஆகி விடுகிறது.
இந்த ரசாயனங்கள் அதிகம் கலக்கப்பட்டால், விஷத்தன்மை கூடி, இறப்பின் சதவீதம் அதிகமாக இருக்கும்.
இந்த கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டுமானால், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பொதுமக்கள் ஆகிய அனைவரின் ஒட்டுமொத்த பங்களிப்பும் தேவை. எக்காரணம் கொண்டும், அரசியல்வாதிகள், கள்ளச்சாராயத் தயாரிப்பாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் உதவ முன் வரக்கூடாது.
காவல்துறை அதிகாரிகளும், கலால்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கள்ளச்சாராயம் பற்றிய தகவல் வந்தாலே, உடனடியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். காவல்துறை, தயவு தாட்சண்யம் இன்றி கள்ளச்சாராயம் உற்பத்தி செய்பவரையும், விற்பனை செய்பவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளச்சாராய வியாபாரிகளைப் பிடித்து வழக்குப் பதிவு செய்வதோடு நிறுத்தி விடாமல், அதை தயாரிப்பவர்கள், வினியோகம் செய்பவர்கள் ஆகியோர் மீதும், முறையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது மக்களும் கள்ளச்சாராய விற்பனை குறித்து விபரம் தெரிந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
காவல்துறையும் இது போன்ற தகவல்களை தெரிவிப்பவர்களின் விபரங்கள் குறித்து ரகசியம் காக்க முன்வர வேண்டும். அப்போதுதான் சமூக ஆர்வலர்களும், சமூக அக்கறை கொண்ட பொதுமக்களும், அவர்களுக்கு தகவல் தெரிவிப்பர்.
கள்ளச்சாராயம் விற்பவர்கள் பிடிபடும்போது கண்டுகொள்ளாத அரசியல்வாதிகளில் சிலர், கள்ளச்சாராய தயாரிப்பாளர்கள் பிடிபடும் போது தலையிடுவதாக, ஊடகச் செய்திகள் வெளி வருகின்றன.
இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். இதை ஒரு சமூக கொடுங்குற்றமாகக் கருதி, எந்நிலையிலும் அரசியல்வாதிகளும், அதிகாரமிக்கவர்களும், சமூக செல்வாக்கு படைத்தவர்களும், சாராய தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம் என்று உறுதி எடுக்க வேண்டும்.
அரசு நிதி உதவி
விபத்தில் மரணம் அடைவோர், ராணுவத்தில் மரணம் அடைவோர், பிற துயர நிகழ்வுகளால் உயிரிழப்போர், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுவோர் போன்றவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை விட, கள்ளச்சாராயம் குடித்து இழப்பவர்களின் குடும்பத்திற்கு பெருந்தொகை அளிக்கும் வழக்கத்தை, அரசு கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் அப்பாவி குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டியது சமூக கடமை தான். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ஒரு பெருந்தொகையை கொடுத்து விட்டால், பெற்றோரை இழந்த அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் காப்பாற்றப்பட்டுவிடும் என்ற கருத்தில், எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம்.
கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களின் குடும்பத்தினருக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து பெருந்தொகை ஒன்றை நிதி உதவியாகக் கொடுப்பது சரிதானா என்ற விவாதம் இப்போது எழுந்துள்ளது. சமூக ஊடங்களிலும் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும், இது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிவிட்டது. இந்த கொள்கையை கண்டிப்பாக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களின் ஒன்றுமறியா அப்பாவிக் குழந்தைகளை ஆதரிக்காமல் அப்படியே விட்டு விடலாமா என்ற எதிர் கேள்வியும் எழுகிறது. அப்படி விடத் தேவையில்லை; அதற்கான மாற்று வழிகளை அரசு யோசிக்க வேண்டும்.
இந்த நிவாரண நிதி உதவித் தொகை, ஆதரவற்ற அந்த குழந்தைகளின் பெயரில் வங்கி வைப்புத் தொகையாக இருப்பு வைக்கப்படுவதில் உள்ள சாதக பாதகங்களை அரசு யோசிக்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இந்த வைப்புத் தொகை, ஆதரவற்ற அந்த குழந்தைகளின் கல்விச் செலவுக்கும், எதிர்கால வாழ்க்கைக்கும் உதவும் என்கிற கருத்தையும் அலட்சியப்படுத்துவதற்கு இல்லை.
விபரீதங்கள் நிகழ்ந்தபின் தீர்வை யோசிப்பதை விட, அவை வருமுன் தடுப்பதே நலம்.
சிந்தனைக்களம்- ஜெ.டி.ரவி, எழுத்தாளர்