பா.ஜ.,வில் காங்., சீனியர் தலைவர்?
பா.ஜ.,வில் காங்., சீனியர் தலைவர்?
பா.ஜ.,வில் காங்., சீனியர் தலைவர்?
ADDED : ஜூன் 23, 2024 04:36 AM

மேற்கு
வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. கடந்த முறை லோக்சபா
எம்.பி.,யாக இருந்ததோடு, லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார்.
பார்லிமென்டில் அதிரடியாக செயல்பட்டவர்; மோடியை பல முறை வம்பிற்கு
இழுத்தவர்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான
மம்தா பானர்ஜியை கடுமையாக எதிர்ப்பவர். இதனால், இவர்கள் இருவருக்கும்
எப்போதுமே ஆகாது.
நடந்து முடிந்த தேர்தலில், 'எப்படியும் ஆதிர்
ரஞ்சனை தோற்கடிக்க வேண்டும்' என, சபதம் மேற்கொண்டார் மம்தா.
குஜராத்திலிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் யூசுப் பதானை கட்சி வேட்பாளராக
ரஞ்சனுக்கு எதிராக போட்டியிட வைத்து, ரஞ்சனை தோற்கடிக்க வைத்தார் மம்தா.
இந்த
தேர்தலில், காங்., மேலிடம் தனக்கு முழுமையான ஒத்துழைப்பு தராமல், மம்தாவை
மறைமுகமாக ஆதரித்ததால் தான் தோல்வி அடைந்து விட்டதாக, கட்சி மேலிடம் மீது
கடும் கோபத்தில் உள்ளாராம், ஆதிர் ரஞ்சன். காங்., தேசிய தலைவர்
மல்லிகார்ஜுன கார்கே, ரஞ்சனுக்கு போன் செய்து, 'டில்லியில் உள்ள அரசு
பங்களாவை காலி செய்ய வேண்டாம்; உங்களுக்கு ஏதாவது செய்கிறோம்' என,
சொல்லியிருக்கிறாராம்.
ஆனால், ஆதிர் ரஞ்சனின் கோபம் குறையவில்லை.
'விரைவில் இவர் பா.ஜ.,வில் இணைவார்' என, செய்திகள் அடிபடுகின்றன; இதுவரை
இதற்கு எந்த மறுப்பும் இவர் தெரிவிக்கவில்லை.
மேற்கு வங்கத்தில்
பா.ஜ.,விற்கு சரியான தலைமை இல்லாததால் தள்ளாடி வருகிறது. எனவே, ரஞ்சன்
தங்கள் பக்கம் வந்தால், இவரை வைத்து மம்தாவிற்கு எதிராக இறங்கலாம் என,
அமித் ஷா யோசித்து வருகிறாராம்.
திரிபுராவின் முன்னாள் முதல்வரும்,
ராஜ்யசபா எம்.பி.,யுமான பிப்லப் தேவ் இப்போது லோக்சபா தேர்தலில் வெற்றி
பெற்று எம்.பி.,யாகி விட்டார். இவரது ராஜ்யசபா சீட் காலியாக உள்ளது. ஆதிர்
ரஞ்சனுக்கு இந்த ராஜ்யசபா சீட்டை அளிக்க, பா.ஜ., முடிவு செய்துள்ளதாம்.
'தீவிர பா.ஜ., எதிர்ப்பாளராக இருந்த ஆதிர் பா.ஜ.,வில் இணைவாரா?' என்றால்,
'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கின்றனர் பா.ஜ.,வினர்.