ஒப்பந்த அடிப்படையில் ஆவினில் உயர் பொறுப்புகள்; 'டம்மி'யாக்கப்படுகின்றனரா அனுபவ அதிகாரிகள்
ஒப்பந்த அடிப்படையில் ஆவினில் உயர் பொறுப்புகள்; 'டம்மி'யாக்கப்படுகின்றனரா அனுபவ அதிகாரிகள்
ஒப்பந்த அடிப்படையில் ஆவினில் உயர் பொறுப்புகள்; 'டம்மி'யாக்கப்படுகின்றனரா அனுபவ அதிகாரிகள்
ADDED : ஜூன் 15, 2024 06:19 AM

மதுரை : ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆவினில் உயர் பொறுப்புகளில் தனி நபர்கள் நியமனம் செய்யப்படும் முடிவு அனுபவ அதிகாரிகளை 'டம்மி'யாக்கும் செயல் என பால்வளத்துறையில் சர்ச்சை வெடித்துள்ளது.
ஆவினில் பால் கொள்முதல், தயாரிப்பு, மார்க்கெட்டிங் பிரிவுகளை மேம்படுத்தும் வகையில் புராஜெக்ட் மேனேஜர் (டைரி ஆட்டோமேஷன்), மார்க்கெட்டிங், லாஜிஸ்டிக் கன்சல்டென்ட்ஸ், டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் கன்சல்டென்ட், பைனான்சியல் மேனேஜ்மென்ட் அனலிஸ்ட், அப்ளிகேஷன் டெவலப்பர் ஆகிய 6 உயர் பொறுப்புகளுக்கு ஓராண்டு ஒப்பந்தத்தில் வெளிநபர்களை நியமிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1.50 முதல் ரூ.2 லட்சம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆவின் அதிகாரிகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. திறமை உள்ள அதிகாரிகள் ஆவின் நிர்வாகத்திற்குள் இருக்கும் போது லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து வெளிநபர்களை ஏன் கொண்டுவர வேண்டும்.
ஆவின் மேலாளர்கள் கூறியதாவது: ஏற்கனவே 'புராஜெக்ட் மேனேஜ்மெனட்' பிரிவு தனியாக உள்ளது. இதில் உதவிப் பொது மேலாளர்கள், பொது மேலாளர்கள், மேலாளர்கள் என 'அதிகாரிகள் பட்டாளமே' உள்ளன. ஆவினில் புதிய திட்டங்களை செயல்படுத்துவது, திட்டம் தேவையா என முடிவு எடுப்பது, பட்ஜெட் எவ்வளவு, டெக்னிக்கல் ஆலோசனைகள் வழங்குவது, ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால் இப்பிரிவிற்கு வெளிநபர் உயர் பதவியில் நியமிக்கப்படவுள்ளார்.
இதுபோல் 'மார்க்கெட்டிங் கன்சல்டென்ட்' பதவி தேவையில்லாதது. மார்க்கெட்டிங் பிரிவை மேம்படுத்த ஜூனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். ஆனால் இந்த புதிய பதவி ஐ.ஏ.எஸ்., அதிகாரியை கட்டுப்படுத்துமா என குழப்பம் உள்ளது. இப்பதவியும் தேவை இல்லாதது. சாப்ட்வேர் உருவாக்கம், டிஜிட்டல் பணிகளுக்காக ஐ.டி.எம்.எஸ்., என்ற 'ஒருங்கிணைந்த டைரி மேலாண்மை முறை'யில் அதிகாரிகள் டீம் உள்ளது. மேலும் துறைரீதியாக ஆட்டோமேஷன் முறை புகுத்த, ஆலோசனைவழங்க மத்திய அரசின் தேசிய பால்வளம் மேம்பாட்டு ஆணையமும் (என்.டி.டி.பி.,) உள்ளது.
இவற்றை கவனத்தில் கொள்ளாமல் ரூ.பல லட்சங்கள் சம்பளம் வழங்கி வெளிநபர்களை உயர் பொறுப்புகளில் வைக்க ஆவின் முயற்சிக்கிறது. இவர்களுக்கு பதில் ஆவினுக்குள் உள்ள திறமையான அதிகாரிகளை இப்பணிகளில் நியமிக்கலாம். ஓராண்டில் மேற்கொள்ளப்படும் 'ஆட்டோமேஷன்' திட்டங்களுக்கு கோடிகளில் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது. இதற்காக வெளிநபர்களை ஒப்பந்த அடிப்படையில் கொண்டு வருகின்றனரா என சந்தேகம் ஏற்படுகிறது என்றனர்.