இயற்கை முறைக்கு மாறும் விவசாயிகள்: குறைகிறது ரசாயன உரத்தின் பயன்பாடு
இயற்கை முறைக்கு மாறும் விவசாயிகள்: குறைகிறது ரசாயன உரத்தின் பயன்பாடு
இயற்கை முறைக்கு மாறும் விவசாயிகள்: குறைகிறது ரசாயன உரத்தின் பயன்பாடு
ADDED : ஜூலை 13, 2024 01:46 AM

சென்னை: தமிழகத்தில் ரசாயன உரங்களின் பயன்பாடு, கடந்தாண்டு, 80,000 டன் அளவிற்கு குறைந்ததால், அதற்கான காரணத்தை வேளாண் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
பயிர் வளர்ச்சி, மகசூல் அதிகரிப்பு மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயன உரங்களை, விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் தேவையான உரங்களை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
இவை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், உற்பத்தியாகும் பொருட்களின் ரசாயன தன்மை மட்டுமின்றி, மண் வளமும் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2022 - 23ம் ஆண்டை காட்டிலும், 2023 - 24ல் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைந்துள்ளது, தற்போது தெரியவந்துள்ளது.
வேளாண் துறையின் உரங்கள் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்தாண்டு தமிழகத்திற்கு தேவையான ரசாயன உரங்களை, போதிய அளவு மத்திய அரசு வழங்கியது. சாகுபடி பரவலாக நடந்ததால், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது.
நடப்பாண்டு, 4.91 லட்சம் டன் யூரியா, 1.40 லட்சம் டன் டி.ஏ.பி., மற்றும் 1.04 லட்சம் டன் பொட்டாஷ், 4.54 லட்சம் டன் கூட்டு உரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
கடந்தாண்டு, 10.1 லட்சம் டன் யூரியா, 2.64 லட்சம் டன் டி.ஏ.பி., மற்றும் 1.63 லட்சம் டன் பொட்டாஷ், 7.24 லட்சம் டன் கூட்டு உரங்கள் ஒதுக்கப்பட்டன.
கடந்த 2022 - 23ம் ஆண்டு, 22.4 லட்சம் டன் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், 2023 - 24ல், 21.6 லட்சம் டன் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளது. உரங்களின் பயன்பாடு, 80,000 டன்கள் அளவிற்கு குறைந்து உள்ளது.
பசுந்தாள் உரம் உள்ளிட்ட இயற்கை உரங்களை ஊக்குவிக்க, பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதனால், ரசாயன உரங்கள் பயன்பாடு குறைந்திருக்க வாய்ப்புள்ளது. மாவட்ட வாரியாக உர பயன்பாடு குறைந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.