இடைத்தேர்தலில் கூடுதல் ஓட்டுப்பதிவு: ஆளுங்கட்சி அச்சம்
இடைத்தேர்தலில் கூடுதல் ஓட்டுப்பதிவு: ஆளுங்கட்சி அச்சம்
இடைத்தேர்தலில் கூடுதல் ஓட்டுப்பதிவு: ஆளுங்கட்சி அச்சம்
ADDED : ஜூலை 12, 2024 05:47 AM

விழுப்புரம் : தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முன்னோட்டமாக நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க.,வினரின் தீவிர கவனிப்பால் ஓட்டு சதவீதம் அதிகரித்திருந்தாலும், கூடுதல் ஓட்டுகள் பா.ம.க.,வுக்கு போயிருக்குமோ என்ற அச்சம் ஆளுங்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல், ஒரு மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வலிமையை நிரூபித்தது. இதனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல், கட்சியினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணி தொடர் வெற்றி பெற்று, வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வெற்றிக்கு அடித்தளமிடவும், மக்களின் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளவும் தீவிர கவனம் செலுத்தியது. இதனால், தேர்தல் அறிவித்தவுடன், ஒரே நாளில், காலியாக இருந்த விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயலரை நியமித்தும், வேட்பாளரை அதிரடியாக அறிவித்தும் களமிறங்கினர்.
அமைச்சர்கள் நேரு, பொன்முடி, வேலு, பன்னீர்செல்வம், ஜெகத்ரட்சகன் எம்.பி., உள்ளிட்டோரை பொறுப்பாளராக நியமித்தும், 15 அமைச்சர்கள், 30 எம்.எல்.ஏ.,க்கள் குழுவினர் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிற அமைச்சர்களும் வந்து பிரசாரம் செய்தனர். தி.மு.க., தரப்பில் தாராளமாக செலவிடப்பட்டு, மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினர்.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தரப்பு, தொடர் தோல்வி காரணமாக, மக்களிடம் செல்வாக்கு போகும் என கருதி தேர்தலை புறக்கணித்து, பின்வாங்கியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் களமிறக்கப்பட்டார். சொந்த மாவட்டத்தில் செல்வாக்கை தக்கவைக்கும் வெற்றி இலக்குடன் ராமதாஸ், அன்புமணி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் களத்தில் இறங்கி தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
விக்கிரவாண்டி தொகுதியில், 2 லட்சத்து 37,031 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். நடந்து முடிந்த இடைத்தேர்தலில், 1 லட்சத்து 95,495 பேர் ஓட்டு போட்டுள்ளனர். 82.48 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
கடந்த 2021 பொது தேர்தலின்போது 82.04 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், இந்த இடைத்தேர்தலில் 0.44 சதவீதம் கூடுதல் ஓட்டு பதிவானது. பெண்கள் அதிகளவில் வந்து ஓட்டு போட்டுள்ளதை, ஓட்டுப்பதிவு அதிகமானதற்கான காரணமாக கூறுகின்றனர்.
இந்த தேர்தல் முடிவில், ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கணிக்கப்படும் நிலையில், அ.தி.மு.க., - தே.மு.தி.க.,வினர், கட்சி தலைமை அறிவித்தபடி தேர்தலை புறக்கணிக்காமல், முழுமையாக ஓட்டு போட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனால், அந்த ஓட்டுகள் பா.ம.க.,வுக்கு சென்று விட்டதோ என்ற அச்சம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.