தேர்தலில் 'ஆற்றல்' தோல்வி எதிரொலி; 10 ரூபாய் உணவகம் பல இடங்களில் மூடல்
தேர்தலில் 'ஆற்றல்' தோல்வி எதிரொலி; 10 ரூபாய் உணவகம் பல இடங்களில் மூடல்
தேர்தலில் 'ஆற்றல்' தோல்வி எதிரொலி; 10 ரூபாய் உணவகம் பல இடங்களில் மூடல்
ADDED : ஜூன் 20, 2024 12:31 AM

காங்கேயம் : லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்ததால், ஈரோடு அ.தி.மு.க., வேட்பாளர் நடத்தி வந்த, 10 ரூபாய் உணவகம் பல இடங்களில் மூடப்பட்டு உள்ளன.
ஈரோடு லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டவர் ஆற்றல் அசோக்குமார். பிரபல பள்ளிகளை நடத்தி வரும் இவர், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 550 கோடி சொத்து மதிப்பை காட்டினார்.
அசோக்குமார் முன்னாள் அ.தி.மு.க., - எம்.பி., சவுந்திரத்தின் மகனும், தற்போதைய மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதியின் மருமகனும் ஆவார். சில ஆண்டுகளாக இத்தொகுதியில் கோவில்கள், அரசு பள்ளிகள் ஆகியவற்றில் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். முன்பு அசோக்குமார் பா.ஜ.,வில் மாநில பொறுப்பில் இருந்தார்.
ஈரோடு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட 'சீட்' கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிவு ஏற்பட்டது, மேலும், தமிழக பா.ஜ., தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், பழனிசாமி முன்னிலையில் தேர்தலுக்கு சில மாதங்கள் முன், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கேயம், தாராபுரம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, ஈரோடு லோச்சபா தொகுதியில் எம்.பி.,யாக வேண்டும் என பணி செய்தார்.
தேர்தல் தேதி நெருங்க நெருங்க ஆறு தொகுதிகளிலும், 10 ரூபாய்க்கு உணவு வழங்குவதாக கூறி, ஆற்றல் உணவகம் என்ற பெயரில் உணவகத்தை துவக்கி நடத்தி வந்தார். காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் தலா, 10 ரூபாய் கட்டணம் என்பதால் ஏழை எளிய மக்கள் உணவருந்தி வந்தனர்.
ஆனால், ஈரோடு லோக்சபா தொகுதி தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் பிரகாஷிடம், ஆற்றல் அசோக்குமார் தோல்வியடைந்தார். இதையடுத்து, பொதுமக்களுக்காக சேவை என்ற பெயரில் நடத்தி வந்த ஆற்றல் உணவகம் காங்கேயம், மூலனுார், கன்னிவாடி, குண்டடம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் மூடப்பட்டுள்ளது.
சேவை செய்வதாக விளம்பரப்படுத்தி, மலிவு விலை உணவகம் என்ற பெயரில் நடத்தி வந்த, அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், உணவகம் துவக்கிய சில மாதங்களில் மூடியதால் பொதுமக்கள் மட்டுமின்றி, அ.தி.மு.க.,வினரும் ஏமாற்றம் அடைந்ததாக கூறுகின்றனர்.
இது குறித்து, 'ஆற்றல்' உணவக நிர்வாகி பிரபாகரன் கூறுகையில், “உணவகம் தற்போது மூடப்பட்டுள்ளது நிஜம் தான். இப்போதைக்கு அதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். விரைவில் இது தொடர்பான தகவல்களை தெரிவிக்கிறோம்,” என்றார்.