தி.மு.க., முப்பெரும் விழா: கமல் பங்கேற்காதது ஏன்?
தி.மு.க., முப்பெரும் விழா: கமல் பங்கேற்காதது ஏன்?
தி.மு.க., முப்பெரும் விழா: கமல் பங்கேற்காதது ஏன்?
ADDED : ஜூன் 19, 2024 05:09 AM

இந்தியன் 2, கல்கி படங்களுக்கு, 'டப்பிங்' பேசும் பணி இருந்ததால், தி.மு.க., முப்பெரும் விழாவில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில், கோவையில் முப்பெரும் விழா நடந்தது. அதில், தி.மு.க., கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். கமல் புறக்கணித்ததாக தகவல் பரவியது.
இந்நிலையில், தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, வீட்டு வசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோர், நேற்று சென்னையில் கமலை, அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர். தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததற்கும், தனக்காக ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் பேசியதற்கும் டி.ஆர்.பாலு நன்றி தெரிவித்தார்.
பின், விக்கிரவாண்டி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என, தி.மு.க., சார்பில், கமலுக்கு அழைப்பு விடப்பட்டது.
இதுகுறித்து, மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கோவையில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில், கமல் பங்கேற்க முடியவில்லை. அதற்கான காரணத்தை, தி.மு.க., தலைமையிடம் தெரிவித்துவிட்டு, கட்சியின் துணைத் தலைவர் மவுரியாவை அனுப்பி வைத்தோம். வரும் 22ம் தேதி, கல்கி படம் வெளியாகிறது. அப்படத்தில் நடித்துள்ள கமல், 'டப்பிங்' பேச வேண்டியது இருந்தது. அதேபோல், ஜூலை 12ல், 'இந்தியன் 2' படம் வெளியாகிறது.
இரு படங்களுக்கும் டப்பிங் பேசும் பணி இருந்ததால், கோவைக்கு கமல் செல்ல முடியவில்லை. தி.மு.க., மீது எந்த அதிருப்தியும் இல்லை. விக்கிரவாண்டியில் நடக்கும் கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்பார்.
இதற்கிடையில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன், துரை வைகோ, விஜய் வசந்த் உள்ளிட்ட, 11 எம்.பி.,க்கள் கமலை சந்தித்து, தங்கள் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -