'டில்லி உஷ்ஷ்ஷ்...!' கவர்னர்கள் மாற்றம்?
'டில்லி உஷ்ஷ்ஷ்...!' கவர்னர்கள் மாற்றம்?
'டில்லி உஷ்ஷ்ஷ்...!' கவர்னர்கள் மாற்றம்?
ADDED : ஜூலை 07, 2024 02:43 AM

மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ள மோடி, விரைவில் சில மாநில கவர்னர்களை மாற்றுவார் என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தற்போதுள்ள கவர்னர்களின் செயல்பாடுகளை மோடி ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
'எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், சில கவர்னர்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை' என, பா.ஜ., தலைவர்கள் மத்தியில் ஒரு கருத்து உலவுகிறது. குறிப்பாக, மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் குறித்து பா.ஜ.,வில் நல்ல அபிப்ராயம் இல்லை. கேரளாவைச் சேர்ந்த போஸ், ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இவருக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆகாது.
கவர்னர் மாளிகையில் பணிபுரியும் ஒரு பெண்ணை, பாலியில் கொடுமை செய்ததாக இவர் மீது மம்தா குற்றம் சாட்டியுள்ளார். இதை மறுத்துள்ள போஸ், மம்தா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
'மம்தாவை கட்டுக்குள் வைக்காமல், அவர் வைத்த பொறியில் சிக்கி தவிக்கிறார் கவர்னர்' என, பா.ஜ., தலைவர்கள் வருத்தப்படுகின்றனர். மேலும், 'தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும், கேரள கவர்னர் ஆரிப் முகமது கானும் எப்படி செயல்படுகின்றனர் என்பதை பார்த்து போஸ் கற்றுக் கொள்ள வேண்டும்' என்கின்றனர் பா.ஜ., தலைவர்கள்.
'வரும், 2026ல் மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒரு அரசியல்வாதி அங்கு கவர்னராக நியமிக்கப்பட வேண்டும்' என, பிரதமருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.
'மேலும், தன் மாநிலத்தில் தங்காமல் அடிக்கடி டில்லிக்கு வருகிறார். ஒரு ஆண்டில், குறைந்தபட்சம் 292 நாட்கள், தான் பணியாற்றும் மாநிலத்தில் கவர்னர் தங்கி இருக்க வேண்டும் என் ஒரு விதிமுறை உள்ளது. இதையெல்லாம் மேற்கு வங்க கவர்னர் பின்பற்றுவதாக தெரியவில்லை. விரைவில், இவர் உட்பட வேறு சில கவர்னர்களும் மாற்றப்படலாம்' என, கூறப்படுகிறது.