ADDED : ஜூன் 30, 2024 12:51 AM

புதுடில்லி: தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை வாரி வழங்குவது பிரதமர் மோடிக்கு பிடிக்காது. பலமுறை பொதுக்கூட்டங்களில் இலவசங்களுக்கு எதிராக பேசியுள்ளார். ஆனால், காங்கிரசோ இலவசங்களை அள்ளி வீசி, கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
'கடந்த ஆண்டுகளில் மக்களுக்கு எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தோம் என சொல்லி வெற்றி பெற முடியாது' என்பதை இந்த தேர்தலில் கண்டுகொண்டார் மோடி. எனவே, தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள தயாராகி விட்டார்.
மஹாராஷ்டிராவில், தற்போது பா.ஜ., - -ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசிய வாத காங்., கூட்டணி அரசு உள்ளது. 288 தொகுதிகளை கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபையின் பதவிக்காலம், இந்த ஆண்டு அக்டோபரில் முடிவடைகிறது; அதற்கு முன் தேர்தல் நடைபெறும்.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், '21 - 60 வயது வரையுள்ள மகளிருக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை; விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள மாணவியரின் மேல்படிப்பிற்கு அரசு செலவு செய்யும்' என, பல இலவசங்களை வாரி வழங்கியுள்ளது. 'ஏற்கனவே கூட்டணியில் உள்ள அஜித் பவாருடன் பிரச்னை, அப்படியிருக்க இந்த இலவசங்கள் பா.ஜ., கூட்டணி அரசுக்கு உதவுமா?' என, கேள்விகள் எழுப்பப்படுகின்றன.