Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ வெள்ள தடுப்பு பணியில் 'விளையாடும்' ஒப்பந்ததாரர்கள்; ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் முன் 'பாவ்லா'

வெள்ள தடுப்பு பணியில் 'விளையாடும்' ஒப்பந்ததாரர்கள்; ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் முன் 'பாவ்லா'

வெள்ள தடுப்பு பணியில் 'விளையாடும்' ஒப்பந்ததாரர்கள்; ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் முன் 'பாவ்லா'

வெள்ள தடுப்பு பணியில் 'விளையாடும்' ஒப்பந்ததாரர்கள்; ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் முன் 'பாவ்லா'

ADDED : ஜூலை 23, 2024 03:33 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், வடகிழக்கு பருவ மழையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

காலதாமதம்


மழை நேரத்தில், இங்குள்ள அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பகிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பிரதான நீர்வழித்தடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால், மக்கள் வசிக்கும் பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தேங்கும் வெள்ள நீர் வடிவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே, இம்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை குறைக்கும் வகையில், பருவமழைக்கு முன், நீர்வழித்தடங்கள், அடையாறு உள்ளிட்ட ஆறுகள், பகிங்ஹாம் கால்வாய் முகத்துவாரங்கள் துார்வாரப்படுகின்றன.

இப்பணியை மேற்கொள்வதற்கு, நீர்வளத்துறைக்கு 10 கோடி ரூபாய் வரை, அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிதியில் முழுமையாக பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என, ஒப்பந்ததாரர்கள் கூறி வந்தனர்.

கடந்தாண்டு வீசிய 'மிக்ஜாம்' புயலால், நான்கு மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது. தென்சென்னை பகுதியில் வெள்ளநீர் முழுமையாக வடிவதற்கு ஒரு மாதம் வரையானது.

அதற்கு முழுமையாக துார் வாராததே காரணம் என, நீர்வளத்துறையினர் அரசிடம் எடுத்துரைத்தனர். துார்வாரும் பணிக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்று, நடப்பாண்டு நீர்வழித்தடங்கள் துார்வாரும் பணிக்கு, 25 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதியில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ள, ஏப்ரல் மாதம் நடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே ஒப்பந்த நிறுவனங்கள் நியமிக்கப்பட்டன. வடகிழக்கு பருவமழை முடியும் வரை, தொடர்ச்சியாக துார்வாரும் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கூடுதல் செலவு


அதன்படி, டிசம்பர் மாதம் வரை பணிகளை மேற்கொள்வதால், கூடுதல் செலவு ஏற்படும் என்று ஒப்பந்ததாரர்கள் கருதினர். அதனால், பணியை துவங்காமல், ஒப்பந்ததாரர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர். பணி ஒதுக்கப்பட்ட இடங்களில், 'பொக்லைன்' வாகனங்களையும், மிதவைகளையும் நிறுத்தி வைத்துஉள்ளனர்.

இந்நிலையில், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள், வெள்ள தடுப்பு பணியை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக இந்த ஆய்வு பணி நடந்து வருகிறது.

உயர் அதிகாரிகள் வரும் போது, பணிகள் நடப்பதை போல, 'பொக்லைன்' இயந்திரங்கள் வாயிலாக, ஆகாயத்தாமரை உள்ளிட்டவை அகற்றப்படுகின்றன. அவர்கள் சென்ற பின், துார்வாரும் இயந்திரங்கள் ஓரம் கட்டி நிறுத்தப்படுகின்றன.

வரும் அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை துவங்கினால், நீர்வழித்தடங்களில் நீரோட்டம் அதிகரிக்கும். அப்போது, ஆகாயத்தாமரை உள்ளிட்ட புதர்கள், செடிகள், அடித்து செல்லப்படும்.

அப்புறம் வாகனத்தில் லேசாக கிளறி விட்டால், சேறும் சகதியும் ஆற்றில் அடித்து செல்லப்படும். இதனால், செலவும் குறையும் என ஒப்பந்ததாரர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறு ஒப்பந்தாரர்கள், 'பாவ்லா' காட்டி, அரசை ஏமாற்றி வருகின்றனர். இதை நீர்வளத்துறை அதிகாரிகளும், பொறியாளர்களும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். ஒதுக்கிய நிதியில், முறையாக பணிகளை மேற்கொள்வதை இனியாவது, தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us