கிருஷ்ணகிரி மகளிர் வாழ்வில் மாற்றம்; பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
கிருஷ்ணகிரி மகளிர் வாழ்வில் மாற்றம்; பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
கிருஷ்ணகிரி மகளிர் வாழ்வில் மாற்றம்; பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
ADDED : ஜூலை 23, 2024 03:52 AM

கடந்த 2023 - 24ம் ஆண்டுக்கான செயல்பாடுகளை விளக்கும் பொருளாதார ஆய்வறிக்கையை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார்.
அதில் தமிழகம் பற்றி கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் வடமேற்கு மாவட்டமான கிருஷ்ணகிரி, மிகவும் வறுமையான மாவட்டமாக இருந்தது. கடந்த, 10 ஆண்டுகளில் இங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில் புரட்சியால் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மின்னணு, மொபைல்போன், மின்சார வாகனங்கள், காலணி என, பல துறைகளில் புதிய தொழிற்சாலைகள் இங்கு அமைக்கப்பட்டன.
சுயஅதிகாரம்
இந்த மாவட்டத்தில் குழந்தை திருமணம், பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பது, மிகவும் குறைந்த பாலின விகிதம், மிகவும் குறைந்த பெண்களின் படிப்பறிவு என, பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. போதிய வேலைவாய்ப்பு, வருவாய் இல்லாததால், பெண் குழந்தைகளை ஒரு பாரமாகவே கருதி வந்தனர்.
ஆனால், தற்போது பல புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்ட பின், பெண்களுக்கு அங்கு வேலை வாய்ப்பு அதிகளவில் அளிக்கப்பட்டது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால், பெண்கள் தங்களுடைய சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.
குழந்தை திருமணங்கள், பள்ளிகளில் பெண் குழந்தைகள் இடைநிற்றல் போன்றவை குறைந்துள்ளன. திருமணம் செய்து கொள்ளும் வயது அதிகரித்துள்ளது.
கல்வி நிறுவனங்களில் அதிகளவு பெண் குழந்தைகள் படிக்கின்றனர். பொருளாதார ரீதியிலும் பெண்கள் சுயஅதிகாரம் பெற்றுள்ளனர்.
மாநில அரசின் முயற்சியால், பெண்களுக்கு சமூக வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலேயே தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்குவது, பெண்கள் தொழிற்பயிற்சி மேற்கொள்ள விடுதிகள் என, பல வசதிகளை மாநில அரசு செய்துள்ளது.
இவ்வாறு மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முயற்சிகளால், இந்த மாவட்டத்தில் பாரமாக கருதப்பட்ட பெண்கள், தற்போது சுயஅதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர்.
தமிழகம் முதலிடம்
நாட்டின் மொத்த ஏழைகள் மக்கள்தொகையில், 1 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் உள்ளனர். அதே நேரத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில், 15 சதவீத நிதி தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல, 0.1 சதவீதம் ஏழைகள் உள்ள கேரளாவில், 4 சதவீத நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களும் இணைந்து, 51 கோடி மனித வேலைநாட்கள் வேலைவாய்ப்பை அளித்துள்ளன.
அதுபோல, இந்த திட்டத்தின்கீழ், தனிநபர் வருவாய் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில்தான் அதிகம் வழங்கப்படுகிறது.
அதிகளவு தொழிற்சாலைகள் உள்ள ஆறு மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழகம் உள்ளது. தமிழகம், குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா இணைந்து, நாட்டின் மொத்த தொழிற்சாலை வேலைவாய்ப்புகளில், 40 சதவீதத்தை வழங்குகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -