'பாவ்லா' காட்டும் ஒப்பந்ததாரர்கள்; நாள் முழுதும் ஆய்வு நடத்திய அதிகாரிகள்
'பாவ்லா' காட்டும் ஒப்பந்ததாரர்கள்; நாள் முழுதும் ஆய்வு நடத்திய அதிகாரிகள்
'பாவ்லா' காட்டும் ஒப்பந்ததாரர்கள்; நாள் முழுதும் ஆய்வு நடத்திய அதிகாரிகள்
UPDATED : ஜூலை 24, 2024 03:17 AM
ADDED : ஜூலை 24, 2024 01:15 AM

சென்னை:வெள்ளத்தடுப்பு பணியை மேற்கொள்ளாமல், 'பாவ்லா' காட்டும் ஒப்பந்ததாரர்கள் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள் நேற்று முழுதும் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், வடகிழக்கு பருவ மழையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இம்மாவட்டங்களில், பருவமழை துவங்குவதற்கு முன், அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பகிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக ஆண்டுதோறும்,10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்தது. இந்த நிதி போதாது என்றதும் நடப்பாண்டில், 25 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.
டெண்டர் பணிகளுக்கு, 'கமிஷன்' கொடுத்து விட்ட தைரியத்தில், செலவை குறைப்பதற்காக ஒப்பந்ததாரர்கள், நீர்வழித்தடங்களுக்கு அருகே, 'பொக்லைன்' மற்றும் மிதவைகளை நிறுத்தி வைத்துள்ளனர். தலைமை செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது மட்டும், பணி செய்வது போல பாவ்லா காட்டி வந்தனர்.
இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் நேற்று வெளியானதும், நீர்வளத்துறை செயலர் மணிவாசனிடம், தலைமை செயலர் அலுவலகத்தில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இதுவரை எவ்வளவு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்ற விபரம் அளிக்க, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் மன்மதனுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதனால், நேற்று முழுதும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை, பூண்டி ஆகிய ஏரிகளிலும், அதன் அருகே நடக்கும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பாலாறு, கிருஷ்ணா நீர் வழங்கும் திட்டம், பகிங்ஹாம் கால்வாய், கூவம் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் பணிகள் தொடர்பாக, உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், தலைமை செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது.
முறையாக பணிகளை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என, அவர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.