4,500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை
4,500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை
4,500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை
ADDED : ஜூலை 10, 2024 03:25 AM

சென்னை: அரசு பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பதவியில், 4500 இடங்கள் காலியாக உள்ளதால், பிற ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பாடங்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 38மாவட்டங்களில், 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 2994 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மட்டும், தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியரின் பணி, சம்பந்தப்பட்ட பள்ளியின் பிற பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கு,கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில், அவர்களால் வகுப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகளை அரசு விரைந்து வழங்கினால், காலி இடங்கள் நிரப்பப்படும். அதன்பின், புதிய ஆசிரியர்களை நியமிக்கலாம்.ஆனால், தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதில், பள்ளிக்கல்வி துறை அலட்சியமாக உள்ளதால், காலியிடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இதனால், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகி, பள்ளி நிர்வாகப் பணியும், மாணவர்களுக்கான பாடம் நடத்தும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.