2 கோடி உறுப்பினர் சேர்ப்பு உண்மையா, பொய்யா?: அ.தி.மு.க., - தி.மு.க., மீது படரும் சந்தேகம்
2 கோடி உறுப்பினர் சேர்ப்பு உண்மையா, பொய்யா?: அ.தி.மு.க., - தி.மு.க., மீது படரும் சந்தேகம்
2 கோடி உறுப்பினர் சேர்ப்பு உண்மையா, பொய்யா?: அ.தி.மு.க., - தி.மு.க., மீது படரும் சந்தேகம்
UPDATED : ஜூன் 09, 2024 03:27 AM
ADDED : ஜூன் 09, 2024 03:25 AM

அ.தி.மு.க.,வில், 2.20 கோடி பேர் உறுப்பினராக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி ஒட்டு மொத்தமாக ஒரு கோடியே 9,417 ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது.
அதேபோல, இரண்டு கோடி உறுப்பினர்களைக் கொண்டதாக கூறும் தி.மு.க.,வும், குறைந்த ஓட்டுகளையே பெற்றுள்ளது. உண்மையில் அக்கட்சிகளில், அவ்வளவு உறுப்பினர்கள் உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும், தங்கள் கட்சியில் கோடிக்கணக்கில் உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறுகின்றன. ஆனால், அந்த அளவு தேர்தலில் ஓட்டுகளை பெறுவதில்லை. அவர்கள் கட்சி உறுப்பினர்களே, அவர்களுக்கு ஓட்டு போடுவதில்லையா என்பதும் தெரியவில்லை.
அ.தி.மு.க.,வில் இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, கடந்த ஆகஸ்ட்டில் பழனிசாமி அறிவித்தார். அதன்பின், 2.20 கோடி உறுப்பினர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., - எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் கட்சிகளுடன் இணைந்து, அ.தி.மு.க., களம் கண்டது. அக்கட்சி, 34 தொகுதிகளில் போட்டியிட்டு, 88 லட்சத்து 80,801 ஓட்டுகளை பெற்றுள்ளது. இது, 20.46 சதவீதம்.
அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு, 11 லட்சத்து 28,616 ஓட்டுகளை பெற்றுள்ளது. இரு கட்சிகள் பெற்ற மொத்த ஓட்டுகள், ஒரு கோடியே 9,417 மட்டும். அ.தி.மு.க., கூறிய கணக்குப்படி உறுப்பினர்கள் ஓட்டளித்திருந்தால், அக்கட்சி அமோக வெற்றியை பெற்றிருக்க முடியும். அவர்கள் ஓட்டளிக்கவில்லையா அல்லது வேறு கட்சிகளுக்கு ஓட்டளித்துள்ளனரா? பன்னீர்செல்வம் தரப்பு கூறுவது போல, தொண்டர்கள் அவர்கள் பக்கம் உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல, தி.மு.க.,வும் இரண்டு கோடி உறுப்பினர் உள்ளதாக அறிவித்தது. அக்கட்சி, 22 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு கோடியே 16 லட்சத்து 89,879 ஓட்டுகளை பெற்றுள்ளது.
அதன் கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ் 46.33 லட்சம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 10.96 லட்சம்; இந்திய கம்யூனிஸ்ட் 9.33 லட்சம்; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5.07 லட்சம்; ம.தி.மு.க., 5.42 லட்சம்; விடுதலை சிறுத்தைகள் கட்சி 9.82 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளன.
ஒட்டு மொத்தமாக தி.மு.க., கூட்டணி, 2.04 கோடி ஓட்டுகளை பெற்றுள்ளது. தி.மு.க.,வில் இரண்டு கோடி உறுப்பினர் என்றால், கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து, மூன்று கோடிக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றிருக்க வேண்டும். அதை பெறாத நிலையில், தி.மு.க.,வில் உண்மையில் எத்தனை பேர் உறுப்பினர்கள் உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிறைய காரணங்கள் இருக்கிறது
தி.மு.க.,வில் உள்ள, 2 கோடி உறுப்பினர்களும், தமிழகத்தில் மட்டும் இல்லை. அந்தமான் தீவு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள உறுப்பினர்களையும் சேர்த்து தான், 2 கோடி பேர் என்ற கணக்கு உள்ளது. தேர்தலுக்கு முன் புதிதாக கட்சியில் இணைந்த உறுப்பினர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையை, நாங்கள் ஆரம்பித்தும் அது முழுமை பெறவில்லை. தேர்தல் கமிஷன், 5 சதவீதத்திற்கு மேல் புதிய உறுப்பினர்களை சேர்க்க அனுமதிக்காததால், வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டன. தற்போதைய தேர்தலில், 65 சதவீதம் ஓட்டு தான் பதிவாகியுள்ளது. எனவே, பதிவாகாமல் இருக்கிற ஓட்டுகளிலும், தி.மு.க., உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வாய்ப்பு உள்ளது. தேர்தல் நடந்த நேரத்தில், தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை என்பதால், வெளியூருக்கு தி.மு.க., உறுப்பினர்கள் சென்றிருக்கலாம். உடல்நலம் பாதிக்கப்பட்டு, வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். சொந்த ஊருக்கு செல்லாதவர்கள் உண்டு. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் இருந்தது போன்ற காரணங்களால், 100 சதவீதம் ஓட்டு பதிவாகாமல் இருந்திருக்கலாம்.
ஆர்.எஸ்.பாரதி, அமைப்பு செயலர், தி.மு.க.,
வருத்தத்திற்குரிய விஷயம்
எங்கள் கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர் சேர்க்கப்பட்டு, முறையாக அறிவிக்கப்பட்டது உண்மை தான். தேர்தலில் உறுப்பினர் அனைவரும் ஓட்டளிக்காதது வருத்தத்திற்குரிய விஷயம் தான். இது தொடர்பாக ஆய்வு நடத்தி, உறுப்பினர்களை உற்சாகப்படுத்தி, வரும் தேர்தலில் அனைத்து உறுப்பினர்களும் ஓட்டளிக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற்று, ஆட்சியை பிடிக்கும்.
வைகைசெல்வன்,
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.
- நமது நிருபர் -,