
அமெரிக்காவில் 50 கோடி வசூலைக் கடந்த பொன்னியின் செல்வன்
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கம்ப்யூட்டர் துறையில் வேலைக்குச் சென்ற எண்ணற்ற தமிழர்கள், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் ஆகியவர்களால் அமெரிக்காவில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கடந்த 15 வருடங்களாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் தான் இதுவரையில் அதிக வசூலை அங்கு பெற்றுள்ளன.
அந்த விதத்தில் இதுவரையில் அமெரிக்காவில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் அதிக வசூலைப் பெற்றுள்ள படமாக மணிரத்னத்தின் "பொன்னியின் செல்வன்" படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. 6 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலாகப் பெற்றுள்ளதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள நிறுவனம் இரண்டு தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்றைய வசூலுடன் சேர்த்தால் தற்போது 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த "2.0" படம் அமெரிக்காவில் 5 மில்லியனுக்கும் சற்று குறைவான தொகையை, அப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் 35 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. இப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 40 கோடி. எனவே, 50 கோடியைக் கடக்கவில்லை. முதல் முறையாக ஒரு வெளிநாட்டில் 50 கோடியைக் கடந்துள்ள முதல் படம் என்ற பெருமையை "பொன்னியின் செல்வன்" பெற்றுள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!