
ப்ரின்ஸ் - தெலுங்கு இயக்குனர்களுக்கான டெஸ்ட் ஆரம்பம்
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான என்.டி.ராமராவ் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வரான பிறகு தெலுங்குத் திரையுலகத்தை அப்போதைய ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்திற்குக் கொண்டு சென்றார். அதற்காக பல சலுகைகளை அறிவித்தார். பின்னர் அங்கு பல ஸ்டுடியோக்கள் உருவாகி தெலுங்கு சினிமா உலகம் முற்றிலுமாக ஐதராபாத்திற்கே மாறியது. இப்போது பெரும்பாலான தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தான் நடந்து வருகிறது.
தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகியும், தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆகியும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தற்போது சில தெலுங்குத் தயாரிப்பாளர்கள் நேரடியாக தமிழ்ப் படங்களைத் தயாரிக்கவும், சில தெலுங்கு இயக்குனர்கள் தமிழ்ப் படங்களை இயக்கவும் ஆரம்பித்துள்ளார்கள்.
விஜய் நடிக்கும் "வாரிசு" படத்தைத் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க, தெலுங்குத் தயாரிப்பாளர் தயாரிக்கிறார். தனுஷ் நடிக்கும் "வாத்தி" படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க, தெலுங்குத் தயாரிப்பாளர் தயாரிக்கிறார். மேலே குறிப்பிட்டுள்ள படங்கள் அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளன.
அவற்றிற்கு முன்பாக சிவகார்த்திகேயன் நடிக்க தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கியுள்ள "ப்ரின்ஸ்" படம் நாளை வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வரவேற்பு விஜய், தனுஷை வைத்து படங்களை இயக்கியுள்ள வம்சி, வெங்கி ஆகியோருக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும். அதற்கு முன்னோட்டமாக "ப்ரின்ஸ்" படம் மூலம் அனுதீப் வெற்றியைப் பறிப்பாரா என்று தெலுங்குத் திரையுலகத்தினரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!