Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ தமிழ் ஹைக்கூ இன்னும் வளர வேண்டும்: ஈரோடு தமிழன்பன் பேச்சு

தமிழ் ஹைக்கூ இன்னும் வளர வேண்டும்: ஈரோடு தமிழன்பன் பேச்சு

தமிழ் ஹைக்கூ இன்னும் வளர வேண்டும்: ஈரோடு தமிழன்பன் பேச்சு

தமிழ் ஹைக்கூ இன்னும் வளர வேண்டும்: ஈரோடு தமிழன்பன் பேச்சு

UPDATED : டிச 23, 2024 12:00 AMADDED : டிச 23, 2024 10:46 AM


Google News
Latest Tamil News
சென்னை :
தமிழ் மொழியில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகள், இந்திய மொழிகளில் சிறந்ததாக உள்ளன. ஆனால், உலக அளவுக்கு இன்னும் வளர வேண்டும் என கவிஞர் ஈரோடு தமிழன்பன் பேசினார்.

நால்வர் காலாண்டிதழின் இரண்டாம் ஆண்டு விழா, சென்னையில் நடந்தது.

இதில், முகிலை ராஜபாண்டியன், நிர்மலா மோகன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், சுப்ரபாரதி மணியன், தமிழ்நெஞ்சன், விஸ்வநாதன், லிங்கராசா, புதுவை ராஜா, ராமகுருநாதன் ஆகியோருக்கு, தலா, 10,000 ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் விருதுகளை, நால்வர் காலாண்டிதழின் சிறப்பு ஆலோசகரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞருமான ஈரோடு தமிழன்பன் வழங்கினார். அவருக்கு, சிறந்த ஆலோசகர் விருது வழங்கப்பட்டது.

விருதுகளை வழங்கி, தமிழன்பன் பேசியதாவது:


நான்கு பேர் இணைந்து, ஒரு காலாண்டிதழை நடத்துவது மிகப்பெரிய சவால் நிறைந்த பணி. அதை செய்யும் ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துகள். உலகெங்கும், கவிஞர்கள் கொண்டாடப்படுகின்றனர். நம் நாட்டில் அப்படிப்பட்ட நிலை இல்லை. இருந்தாலும், நிறைய கவிஞர்கள் இங்கு உள்ளனர்.

தற்போது, ஹைக்கூ என்ற புதிய வடிவத்தில், உலகக் கவிதைகள் வளர்ந்த நிலையில், நாம் இந்திய அளவில் வளர்ந்திருந்தாலும், உலக அளவில் வளரவில்லை.

நம் சிலப்பதிகாரம் உள்ளிட்ட காப்பியங்களில் ஹைக்கூ கவிதைகள் நிறைந்துள்ளன. அவற்றை வளர்த்தெடுக்கும் வகையில், அடுத்த நால்வர் காலாண்டிதழை, ஹைக்கூ சிறப்பிதழாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பேராசிரியர் ராமகுருநாதன் பேசுகையில், இந்த இதழ் படைப்புக்கு மட்டுமல்லாது, ஒற்றுமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. ஆசிரியர் குழுவின் முயற்சிக்கு பாராட்டுகள் என்றார்.

மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், விருதாளர்களை வாழ்த்தி பேசியதாவது:


கவிஞர் அமரன் உள்ளிட்டோர் பெங்களூரில் வசித்தபடி, தமிழ் இதழை நடத்துவதும், தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சிற்றிதழாளர்கள் என, 10 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு, தலா, 10,000 ரூபாய் வழங்கி ஊக்குவிப்பதும் வியப்பளிக்கிறது.

தங்க விளக்கானாலும் துாண்டுகோல் வேண்டும் என்பர். அந்த வகையில், எழுத்தாளர்களை துாண்டுவதாக உள்ள நால்வர் இதழுக்கு வாழ்த்துகள். நாங்களும், மணிமேகலை பிரசுரத்தின் வழியாக, தமிழ் எழுத்தாளர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், 1 லட்சம் ரூபாய் வழங்கி கவுரவிக்கிறோம்.

இந்த ஆண்டு மருதனுக்கு வழங்கப்பட்ட நிலையில், வரும் ஜனவரியில் சென்னை புத்தக காட்சியில், ராசி அழகப்பனுக்கு அதை வழங்க உள்ளோம்.

அப்போது, அந்துமணி எழுதிய கேள்வி பதில்கள் புத்தகத்தின் புதிய பகுதியை வெளியிட உள்ளோம். மொழிபெயர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், மும்பை குமார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள, பொன்னியின் செல்வன் இரண்டு பாக நாவலை வெளியிட உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், வணக்கம் மரணதேவி, முத்தொள்ளாயிர மோகனம், நம் வாழ்க்கை வாழ்வது நாம், இன்றைய இஸ்லாம், உறைக்குள் உடையும் வானவில், முருகர்மலைப்பள்ளு, மகரந்தக் கவிதைகள் ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us