Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வர்த்தக மையத்தில் இயந்திர கருவிகள் கண்காட்சி

வர்த்தக மையத்தில் இயந்திர கருவிகள் கண்காட்சி

வர்த்தக மையத்தில் இயந்திர கருவிகள் கண்காட்சி

வர்த்தக மையத்தில் இயந்திர கருவிகள் கண்காட்சி

UPDATED : ஏப் 19, 2024 12:00 AMADDED : ஏப் 19, 2024 10:37 AM


Google News
சென்னை:
இந்தியாவின் உலகளாவிய பொருட்களின் உற்பத்தி வெறும் 3.2 சதவீதம் மட்டுமே. தொழில்நுட்ப உதவி, உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பால், உற்பத்தி 25 சதவீதமாக உயரும்,'' என டி.வி.எஸ்., வீல்ஸ் இந்தியா லிமிடெட் மூத்த துணை தலைவர் பாரதி தெரிவித்தார்.

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மெட்ராஸ் இயந்திர கருவிகள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில், ஐந்து நாள் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி நேற்று துவங்கியது.

துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஆட்டோ போர்ஜ் பிரைவேட் லிமிடெட் தலைவர் சீதாராமன் பங்கேற்றார்.

அவர் பேசியதாவது:

இதுபோன்ற கண்காட்சிகள் உற்பத்தி, விற்பனைக்கு மூல காரணமாக விளங்குகின்றன. பயன்பாட்டு நிறுவனங்களுக்கு புதிய தொழில்நுட்பம் குறித்து அறிய உதவுகிறது. தொழிற்சாலைகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து மனித ஆற்றல் குறைந்துவருகிறது.

கடந்த, 1990களில் இருந்து ஏற்றுமதியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாடுகளில் மதிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது, மரியாதை ஏற்பட்டுள்ளது. தற்போதுனா ஏராளமான வெளிநாட்டினர் நேரடியாக கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

நம் நாட்டில் ஆண்டிற்கு 49 லட்சம் நான்குசக்கர வாகனங்கள், தலா 10 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள், 2.7 கோடி இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால், உதிரிபாகங்களின் தேவை பெருமளவு அதிகரித்து உள்ளது.

அதேசமயத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. இதுபோன்ற கால கட்டங்களில் தொழில் நுட்ப வளர்ச்சி தேவைப்படுகிறது. அதற்கு இந்த கண்காட்சி சிறந்து உதவுகிறது.
இவ்வாறு சீதாராமன் பேசினார்.

டி.வி.எஸ்., வீல்ஸ் இந்தியா லிமிடெட் மூத்த துணை தலைவர் பாரதி பேசியதாவது:


நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வரும், 2030ம் ஆண்டு 5 லட்சம் கோடி ரூபாயாக உயர வாய்ப்புள்ளது. இதில், 53 சவீதம் சேவை தொழில் நிறுவனங்கள், 25 சதவீதம் உற்பத்தி பிரிவு, 18 சதவீதம் விவசாயம் பங்கெடுக்கிறது. பணம் இருந்தால், நம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதனை தருவது உற்பத்தி பிரிவுதான். உலகளவில் பல இடங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் போர் காரணமாக சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உலகில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே நாம் உற்பத்தியில் கவனம் செலுத்துவது அவசியம்.

உலகளவில் சீனா 28 சதவீதம் பொருட்களை உற்பத்தி செய்கிறது. ஒரு பல்ப் வாங்குது என்றாலும், சீனாவின் பல்ப் தேடுகிறோம். அதன் விலை 35 ரூபாய். நம் உள்நாட்டு நிறுவன பல்ப் வாங்குவதில்லை. ஏனென்றால் அது, 120 ரூபாய். இதை ஒன்று வாங்கி, ஓராண்டு பயன்படுத்துவதை விட, இரண்டு சீன பல்ப்களை 70 ரூபாய்க்கு வாங்கி, ஓராண்டு பயன்படுத்தலாம் என, கணக்கிடுகின்றனர்.

இந்தியாவின் உலகளாவிய பொருட்களின் உற்பத்தி வெறும் 3.2 சதவீதம் மட்டுமே. இது தொழில்நுட்ப உதவி, உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பால், 25 சதவீதமாக உயரும் வாய்ப்பு உள்ளது.

இந்திய உள்கட்டமைப்பு வளர்ந்து வருகிறது. சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலை போன்ற சாலைகள் தரமாக போடப்படுகின்றன. விமான போக்குவரத்து விரிவாக்கம் செய்யப்படுகிறது. தொழில்நுட்ப மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

நாட்டில், 17 லட்சம் பொறியாளர்கள் உருவாகின்றனர். தமிழகத்தில் 2 லட்சம் பொறியாளர்கள் உருவாகின்றனர். அவர்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

எனவே, இதுபோன்ற கண்காட்சி வாயிலாக உற்பத்தி பிரிவு உயர்ந்து, இந்தியா 25 சதவீத உலகளவிலான உற்பத்தியை அடைய வேண்டும். இதற்கு நம் பொருட்களை மக்கள் வாங்கும் விலைக்கு உற்பத்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, துவக்க விழாவில் கண்காட்சியின் ஆலோசகரும், கூட்டமைப்பு உறுப்பினருமான சையது அலிம் மர்தஜா, கண்காட்சி தலைவர் பர்கத் ரப்பானி, எச்.எஸ்.ஜி., இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us