Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மருத்துவ மாணவர் சேர்ப்பில் விதிமீறல்; புதுச்சேரி கல்லுாரிக்கு ரூ.20 லட்சம் அபராதம்

மருத்துவ மாணவர் சேர்ப்பில் விதிமீறல்; புதுச்சேரி கல்லுாரிக்கு ரூ.20 லட்சம் அபராதம்

மருத்துவ மாணவர் சேர்ப்பில் விதிமீறல்; புதுச்சேரி கல்லுாரிக்கு ரூ.20 லட்சம் அபராதம்

மருத்துவ மாணவர் சேர்ப்பில் விதிமீறல்; புதுச்சேரி கல்லுாரிக்கு ரூ.20 லட்சம் அபராதம்

UPDATED : நவ 13, 2024 12:00 AMADDED : நவ 13, 2024 08:33 AM


Google News
சென்னை:
மருத்துவ கவுன்சில் வழிமுறைகளை மீறி மாணவர்களை சேர்த்ததற்காக, புதுச்சேரி மருத்துவக் கல்லுாரிக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு, 26 இடங்களை அரசிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி காலாப்பேட்டையில், பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்' கல்லுாரி உள்ளது. கடந்த 2017 - 18ம் ஆண்டில், இந்தக் கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

மேல் படிப்பு


மருத்துவ கவுன்சில் வழிமுறைகளின்படி 26 மாணவர்கள் சேர்க்கப்படாததால், அவர்களை விடுவிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. இதற்கான உத்தரவை, மருத்துவ கவுன்சில் பிறப்பித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் கல்லுாரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. தற்போதைய நிலை நீடிக்க, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, 26 மாணவர்களும் படிப்பை முடித்து விட்டனர். சிலர் மேல் படிப்பை தொடர்கின்றனர்; சிலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது.

கல்லுாரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மாணவர்கள், 26 பேரும் படிப்பை முடித்து விட்டனர். அவர்களை விடுவிப்பதால் எந்த பலனும் இல்லை. அவர்கள் பெற்ற கல்வி அறிவும் வீணாகி விடும், என்றார்.

மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க, மருத்துவ கவுன்சில் முடிவெடுத்துள்ளது. ஆனால், கல்லுாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு, 26 இடங்களை கல்லுாரி நிர்வாகம் நிரப்பக்கூடாது என்றார்.

அதற்கு, கல்லுாரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கல்லுாரிக்கு தடை விதிப்பதற்கு பதில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், இரண்டு ஆண்டுகளில், 26 இடங்களை அரசிடம் ஒப்படைக்கிறோம் என்றார்.

இதையடுத்து, ஆதரவற்ற அமைப்புக்கு இழப்பீடு வழங்க கல்லுாரி நிர்வாகத்துக்கு உத்தரவிடும்படி, மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர் கோரினார். இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவு:

மாணவர்களுக்கு எதிராக மருத்துவ கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

ரூ.10 லட்சம்



மருத்துவப் படிப்பை பூர்த்தி செய்ததற்கான சான்றிதழை வழங்கவில்லை என்றால், 26 மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். 2025 - 26ம் ஆண்டுக்கு 13 இடங்களையும், 2026 - 27ம் ஆண்டுக்கு 13 இடங்களையும் கல்லுாரி நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும்.

சென்னை தரமணியில் உள்ள மன வளர்ச்சி குன்றியோருக்கான 'ஸ்பாஸ்டிக் சொசைட்டி'க்கு, 10 லட்சம் ரூபாய்; அடையாறு கேன்சர் மருத்துவமனையின் மகேஷ் நினைவு அறக்கட்டளைக்கு, 10 லட்சம் ரூபாயை இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us