Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச யோகா கற்றுக்கொடுக்கும் தமிழர்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச யோகா கற்றுக்கொடுக்கும் தமிழர்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச யோகா கற்றுக்கொடுக்கும் தமிழர்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச யோகா கற்றுக்கொடுக்கும் தமிழர்

UPDATED : ஜூன் 25, 2024 12:00 AMADDED : ஜூன் 25, 2024 06:16 AM


Google News
பெங்களூரு:
யோகா செய்வது உடலுக்கும், மனதிற்கு வலிமையை தரக்கூடியது. பண்டைய காலம் முதல், நமது முன்னோர்கள் யோகா செய்து, பயனடைந்தனர். இன்றளவும் மறையாமல் அப்படியே உள்ளன.

குழந்தைகள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் யோகா செய்வது நல்லது. பல நோய்களுக்கு யோகா மூலம் தீர்வு காண முடியும் என்பதை ஆயுர்வேத மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

தவிர்ப்பது ஏன்?

நம்மில் பலரும் நேரமில்லை என்று கூறி, யோகா செய்வதை தவிர்த்து வருகிறோம். மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது யோகா என்பது பற்றி, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்த வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கிறார் ஒரு தமிழர். ஆம், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை பூர்வீகமாக கொண்ட சண்முகம், 47, பெங்களூரு ஜீவன்பீமா நகர் சுதாம்நகர் பகுதியில் வசிக்கிறார்.

இலவசம்

கட்டடங்களுக்கு வண்ணம் பூசும் பணியை செய்து வருகிறார். ஐந்தாண்டுகளாக யோகா பயின்று வருகிறார். டிப்ளமோ யோகா படிப்பு, கடந்தாண்டு முடித்தார். தான் கற்றுக் கொண்டதை மற்றவர்களும் தெரிந்து, பயன் அடைய வேண்டும் என்று விரும்பினார்.

இதற்காக, ஆனந்தபுரம் அரசு தமிழ் உயர்நடுநிலைப் பள்ளி, சுதாம்நகர் கன்னட நடுநிலைப் பள்ளி, நஞ்சாரெட்டி காலனி அரசு உயர்நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 250க்கும் அதிகமான மாணவ - மாணவியருக்கு இலவசமாக யோகா சொல்லிக் கொடுக்கிறார்.

வாரத்தில் ஐந்து நாட்கள் வண்ணம் பூசும் பணியை செய்துவிட்டு, சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு சென்று யோகா சொல்லிக் கொடுத்து வருகிறார்.

சண்முகம் கூறியதாவது:


யோகாவின் பயனை இப்போதே மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால், பயன் அடைவர். அதுவும் அரசு பள்ளிகளில் ஏழைகள் தான் அதிகமாக இருப்பதால், அவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்க யாரும் முன்வரவில்லை. எனவே நான் சொல்லிக் கொடுக்கிறேன்.

நோய் இன்றி வாழ யோகா அவசியம். பல்வேறு நோய்களால் அவதிப்படுவோரும் செய்து, பயன் அடையலாம். தியானம் செய்து, மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். அடுத்த கட்டமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுக்கும் யோகா சொல்லிக் கொடுப்பதற்கு திட்டமிட்டு வருகிறேன்.

அனைவரும் கட்டாயமாக யோகா செய்யுங்கள். தெரிந்தவர்கள், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். அனைவரும் நோயின்றி வாழ்வோம். வண்ணம் பூசும் பணியை விட, மாணவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுப்பது மனதிற்கு நிறைவாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

-நமது நிருபர்-




      Our Apps Available On




      Dinamalar

      Follow us