Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நியமன தேர்வு எழுதி காத்திருக்கும் 25,000 பேர் விரக்தி

நியமன தேர்வு எழுதி காத்திருக்கும் 25,000 பேர் விரக்தி

நியமன தேர்வு எழுதி காத்திருக்கும் 25,000 பேர் விரக்தி

நியமன தேர்வு எழுதி காத்திருக்கும் 25,000 பேர் விரக்தி

UPDATED : பிப் 12, 2025 12:00 AMADDED : பிப் 12, 2025 11:43 AM


Google News
மதுரை:
அரசு, உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனங்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி., தாள் - 1 தேர்ச்சி கட்டாயமாகும்.

கடந்த 2011 முதல் இதுவரை ஆறு முறை நடந்த தேர்வில், 68,000 பேருக்கும் மேல் தேர்ச்சி பெற்று, 12 ஆண்டுகளாக பணி நியமனம் இன்றி உள்ளனர்.

இந்நிலையில், தொடக்க கல்வித்துறையில் 2,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு டி.இ.டி., தேர்ச்சி பெற்றிருந்தாலும், கூடுதலாக நியமனத் தேர்வு எழுத வேண்டும் என, 2023 பிப்., 9ல் அறிவிப்பு வெளியிட்டு, 2024 ஜூலையில் தேர்வு நடத்தப்பட்டது. இதுவரை அதற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை.

பொதுவாக நியமனத் தேர்வு எழுதினால், ஐந்து நாட்களுக்குள் கீ ஆன்சர் வெளியிட வேண்டும். அதுவும் வெளியிடவில்லை. இதனால் தேர்வு எழுதிய 25,319 பேர் ஏழு மாதங்களாக காத்திருக்கின்றனர். இதற்கிடையே தொடக்க கல்வித்துறையில் 10,000த்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

அவற்றை முறையாக காலிப்பணியிடங்களாக அறிவித்து டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஏழு மாதங்களாக கோரிக்கை மனுக்கள் அளிக்கும் போராட்டத்தில், இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வு எழுதிய தேர்வர்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளது.

அந்த அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:

நியமனத் தேர்வு அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவுற்றது. தேர்வு எழுதி ஏழு மாதங்களாகின்றன. முதல்வர், துணை முதல்வர், கல்வி அமைச்சரின் நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் எங்கள் அமைப்பு சென்று தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்து வருகிறோம்.

முதல்வரிடம் மட்டும் 29 முறை நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வரிடம் 32 முறையும், அமைச்சரிடம் 42 முறையும் மனுக்கள் அளித்துள்ளோம். இவை தவிர முதல்வர் தனிப்பிரிவில் 5,000த்திற்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்துள்ளோம். ஆனாலும் எங்களுக்கு விடிவு கிடைக்கவில்லை.

ஒரு கோரிக்கை தொடர்பாக அதிகபட்சம் மாநில முதல்வரிடம் தான் மனு அளிக்க முடியும். அவரிடமே பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லையே. எங்களின் 12 ஆண்டுகள் தத்தளிப்புக்கு இனியாவது விடிவு கிடைக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us