சிறு முதலீட்டில் இந்த தொழிலை துவங்கலாம்!
சிறு முதலீட்டில் இந்த தொழிலை துவங்கலாம்!
சிறு முதலீட்டில் இந்த தொழிலை துவங்கலாம்!
ADDED : பிப் 10, 2024 11:21 PM

சேலம், குகை பகுதியில், 'ஆனந்தா கேட்டரிங்ஸ்' நிறுவனத்தை நடத்தி வரும் கிருஷ்ணவேணி:
சேலம் மாநகரில், பரபரப்புக்கு பஞ்சமில்லாத குகை பகுதியில், நெசவு மற்றும் விசைத்தறி கூடங்கள், வெள்ளி பட்டறைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் நிறைந்துள்ளன.
இன்று இங்கு, திரும்பிய பக்கமெல்லாம் வீட்டு வாசல்களிலும், பல்வேறு கடைகளிலும் குழம்பு வியாபாரம் ஜோராக நடக்கிறது.
கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், வீட்டில் இருந்தபடியே குழம்பு வியாபாரத்தை துவங்கி, இந்த தொழிலுக்கு விதை போட்டது நான் தான். ஒரு நாள் விசேஷத்துக்கு போயிட்டு, மதியம் வீட்டுக்கு வர லேட்டாகிடுச்சு; பக்கத்தில் எந்த ஹோட்டலிலும் சாப்பாடு இல்லை.
'இப்போது சமைச்சு எத்தனை மணிக்கு சாப்பிடுறது... குழம்பு ஏதாச்சும் கிடைச்சாலாவது வீட்டிலேயே சாதம் வெச்சுக்கலாமே' என நானும், கணவரும் புலம்பினோம்.
அப்போது தான், குழம்பு வியாபாரம் செய்து பார்க்கலாம்னு நினைத்தேன். மறுநாள் சிறிது காய்கறிகள் வாங்கி, சாம்பார், ரசம் செய்து விற்க துவங்கினேன்.
எங்கள் பகுதியில் கருப்பு மற்றும் வெள்ளை அவரையில் செய்யும் கூட்டுக்குழம்பு பிரபலம். இதை, பெரும்பாலும் விசேஷ வீடுகளில் தான் செய்வர்.
இந்தக் கூட்டுக்குழம்புடன், புளிக்குழம்பு, வத்தக்குழம்பு, காளான் குழம்பு, துவையல், பலவித பொரியலையும் செய்து விற்க துவங்கினேன். மெதுவாக வியாபாரம் சூடு பிடிக்க துவங்கியது.
பின், வயசானவங்க, சமைக்க வாய்ப்பில்லாதவங்களுக்கு சாப்பாடும் தயாரித்தோம். குழம்பு தவிர, காலையும், மாலையும் டிபன் வகைகளும், மதியத்தில் பலவித சாப்பாடும் விற்பனை செய்கிறோம். இது தான், ஆனந்தா கேட்டரிங்ஸ் என, வளர்ந்து நிற்கிறது.
போட்டிகள் அதிகமானாலும், தொடர் வாடிக்கையாளர்கள் எங்களிடம் தான் வருவர். அதனால், எங்களுக்கான வியாபாரம் சிக்கலின்றி நடக்கிறது.
அதிகமான லாபம் எதிர்பார்க்காமல், இந்தத் தொழிலை வீட்டில் இருந்தபடியே பண்றவங்க தான் அதிகம். அதனால், உப்பு, காரம், எண்ணெய் எல்லாமே அளவா தான் பயன்படுத்துவோம்.
அக்கம் பக்கத்தினருக்கு மட்டும் சமைத்து கொடுப்பது என்றால், சிறு முதலீட்டிலேயே இந்த தொழிலை துவங்கலாம்.
இதுவே, ஒரு நாளைக்கு 100 பேர் எனில், குழம்பு, பொரியல், சாப்பாடுன்னு விற்பனை செய்வதாக இருந்தால், முதலீட்டுக்கு, 5,000 ரூபாய் தேவைப்படும்.
விற்பனையில் தொய்வில்லாமல் பார்த்துக்கிட்டால், வெளி வேலைக்கு போறதை விடவும், இந்த தொழிலில் நிறைவாக சம்பாதிக்கலாம்.