தேசிய தலைவர் பதவிக்கு நெருக்கடி வருமா?: கர்நாடக காங்., தலைவர்களுக்கு கார்கே 'டோஸ்'
தேசிய தலைவர் பதவிக்கு நெருக்கடி வருமா?: கர்நாடக காங்., தலைவர்களுக்கு கார்கே 'டோஸ்'
தேசிய தலைவர் பதவிக்கு நெருக்கடி வருமா?: கர்நாடக காங்., தலைவர்களுக்கு கார்கே 'டோஸ்'
ADDED : பிப் 05, 2024 11:07 PM

''தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே, பா.ஜ.,வினர் சுறுசுறுப்பாக உள்ளனர். நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள்?,'' என மாநில தலைவர்களுக்கு, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்குவது, காங்கிரஸ் தலைவர்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. 2019 லோக்சபா தேர்தலின்போது, மாநிலத்தின் 28 தொகுதிகளில், பா.ஜ., 25, காங்கிரஸ், ம.ஜ.த., - பா.ஜ., ஆதரவு சுயேச்சை தலா ஒரு இடத்தை கைப்பற்றினர்.
கர்நாடக ஆட்சி
அப்போது, கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தது. தற்போது, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்முறை பா.ஜ., - ம.ஜ.த., இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
கடந்த முறை போன்று, 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு, பா.ஜ., தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பா.ஜ., விரும்பி உள்ளதாக ஒரு அரசியல் விமர்சகர் கூறினார்.
மந்திர அட்சதை
இதற்காக, விழாவுக்கான மந்திர அட்சதையை வழங்குவது போன்று, பா.ஜ.,வினர் வீடு வீடாக சென்று வந்தனர். இது, கர்நாடகா மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லாம்.
இதனால், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர்கள் சிலரை புதுடில்லிக்கு அழைத்து, கடும் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
'தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே, பா.ஜ.,வினர் சுறுசுறுப்பாக உள்ளனர். நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள். வேட்பாளர்கள் தேர்வு குறித்து நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வீடு, வீடாக சென்று, ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் குறித்து மக்களுக்கு நேரில் விளக்க வேண்டும். இல்லை என்றால் 2019 போன்று, பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது' என, கார்கே கூறினாராம்.
தன் சொந்த மாநிலமான கர்நாடகாவில் பின்னடைவு ஏற்படும் பட்சத்தில், தன்னுடைய தேசிய தலைவர் பதவி இழக்க நேரிடுமோ என்பது கார்கேவின் பயம். எனவே 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு கட்சியினருக்கு இலக்கு நிர்ணயித்து உள்ளார்
- நமது நிருபர் -.