விமான நிலையத்தைச் சுற்றி கறிக்கடைகளுக்கு தடை வருமா?
விமான நிலையத்தைச் சுற்றி கறிக்கடைகளுக்கு தடை வருமா?
விமான நிலையத்தைச் சுற்றி கறிக்கடைகளுக்கு தடை வருமா?
ADDED : மார் 20, 2025 10:32 PM
இந்தியா கேட்:இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி இறைச்சிக்கூடங்களுக்கு தடை விதிக்கக்கோரும் பொது நலன் மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி உயர் நீதிமன்றத்தில் விலங்கு உரிமை ஆர்வலர் கவுரி மவுலேகி தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறியிருப்பதாவது:
விமான நிலைய விதிகளின்படி, விமான நிலையத்தைச் சுற்றி 10 கி.மீ., சுற்றளவில் இறைச்சிக்கூடங்களோ அனுமதி இல்லாத நிறுவனங்களோ இயங்க முடியாது.
விலங்குகளையோ பறவைகளையோ ஈர்க்கும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. இந்த விதியை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
இந்த விதிகளை மீறி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 10 கி.மீ., சுற்றளவில் இறைச்சிக்கூடங்கள் உள்ளன. இதனால் விமானங்களில் பறவைகள் மோதும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன.
கடந்த 2018 மற்றும் 2023 ஆண்டுக்கு இடையே, இந்திரா காந்தி விமான நிலையத்தில் பறவைகள் மோதியதாக 705 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இது, ஆறு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள 29 விமான நிலையங்களில் பறவைகள் மோதிய சம்பவங்களால் பதிவான மொத்த எண்ணிக்கையை விட அதிகம்.
எனவே இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி 10 கி.மீ.,க்கு இருக்கும் அனைத்து இறைச்சிக்கூடங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனு தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்படி உத்தரவிட்டு, இதற்கு ஆறு வார கால அவகாசம் அளித்து, உயர் நீதிமன்ற அமர்வு வழக்கை மே 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.