ஆபத்தான நிலையில் ஆகும்பே தடுப்பு சுவர் அசம்பாவிதத்துக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆபத்தான நிலையில் ஆகும்பே தடுப்பு சுவர் அசம்பாவிதத்துக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆபத்தான நிலையில் ஆகும்பே தடுப்பு சுவர் அசம்பாவிதத்துக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?
ADDED : ஜன 27, 2024 11:19 PM

ஷிவமொகா: 'தெற்கின் சிரபுஞ்சி' என்று அழைக்கப்படும் ஆகும்பேயில், இயற்கை அழகை ரசிப்பதற்காக கட்டப்பட்டுள்ள தடுப்பு, துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளது.
ஷிவமொகா மாவட்டம், தீர்த்தஹள்ளியில் அமைந்து உள்ள ஆகும்பே மேற்கு தொடர்ச்சி மலை. தென்னகத்தின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 705 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சூரியன் ஓய்வெடுக்கும் எழிலை காண, இங்கு மேடை அமைக்கப்பட்டு உள்ளது.
இங்குள்ள சாலைகள் மழைகாலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும். வாகன ஓட்டிகளுக்கு இது சவாலான பயணம். பனிமூட்டமான சூழலில் அருகில் உள்ள நபரை கண்டறிவது சாத்தியமற்றது. ஆகும்பே தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப பல்வேறு அழகுகளை வெளிப்படுத்துகிறது.
நவம்பர் முதல் பிப்ரவரி வரை தெளிவான நீல வானம், சூரிய அஸ்தமனத்தை பார்க்க அனுமதிக்கிறது. மலைத்தொடர்களுக்கு இடையே வானத்தில் இருந்து மறையும் சூரியனை பார்க்கும் மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. தினமும் 500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர்.
சூரியன் அஸ்தமனத்தை பார்க்கும் மேடை பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. காங்கிரீட் தடுப்பு சுவரில் உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. விபத்து ஏற்படும் முன்பு சுற்றுலா துறை, பொதுப்பணி துறை விழித்துக் கொள்ள வேண்டும்.
ரூ.2 கோடியில் வளர்ச்சி
காங்கிரசின் முன்னாள் முதல்வர் தரம்சிங், பொதுப்பணி துறை அமைச்சராக இருந்தபோது, ஆகும்பே சுற்றுலா வளர்ச்சிக்காக, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கினார்.
இதில், கண்காணிப்பு கோபுரம் கட்டப்பட்டது. பொதுப்பணி துறை மூலம், தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தற்போது எந்த துறையின் கீழ் உள்ளது என்ற கேள்விக்கு எந்த துறையில் இருந்தும் தெளிவான தகவல் கிடைக்கவில்லை.
சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், ''கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் செல்லும் சுற்றுலா பயணியர், உயிருக்கு பயந்து செல்ல வேண்டி உள்ளது.
துருப்பிடித்த இரும்பு அல்லது சிமென்ட் துண்டு திடீரென மேல் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
''சூரியன் அஸ்தமனத்தை பார்க்க கூட்டம் அலை மோதினால், மேலே இருப்பவர்களும் வாகனங்களுடன் சேர்ந்து பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. கண்காணிப்பு கோபுரத்தை மேம்படுத்த வேண்டும்,'' என்றார்.