2 மாதத்துக்கு முன் மாயமான மனைவி கணவர் வீட்டின் முன் குழியில் சடலமாக மீட்பு
2 மாதத்துக்கு முன் மாயமான மனைவி கணவர் வீட்டின் முன் குழியில் சடலமாக மீட்பு
2 மாதத்துக்கு முன் மாயமான மனைவி கணவர் வீட்டின் முன் குழியில் சடலமாக மீட்பு
ADDED : ஜூன் 22, 2025 04:06 AM

பரிதாபாத்: ஹரியானாவில், இரண்டு மாதங்களுக்கு முன் மாயமான பெண், அவரது கணவர் வீட்டின் முன் குழியில் இருந்து உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் அருகேயுள்ள கேரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் தனு ராஜ்புத், 24. இவருக்கும் ஹரியானாவின் பரிதாபாத் ரோஷன் நகரைச் சேர்ந்த அருண் என்பவருக்கும், இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், கணவன் வீட்டாருக்கும் தனுவுக்கும் கருத்து வேறுபாடால் அடிக்கடி சண்டை நடந்தது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், தனு ஓராண்டுக்கும் மேலாக தாய் வீட்டில் வசித்து வந்தார்.
பின், சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பிய நிலையில், கடந்த இரண்டு மாதத்துக்கு முன் தனு மாயமானதாக கணவர் வீட்டார் தெரிவித்தனர்.
இதுகுறித்து புகார் அளித்ததை தொடர்ந்து, தனுவை பல இடங்களிலும் தேடிய போலீசார் சந்தேகமடைந்து, கணவர் வீட்டின் முன் உள்ள குழியை நேற்று முன்தினம் தோண்டினர். அப்போது உடல் சிதைந்த நிலையில் தனு உடல் மீட்கப்பட்டது.
அவர் அணிந்திருந்த உடை வாயிலாக, இறந்தது தனு தான் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக தனு உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தனுவின் கணவர் அருண், மாமனார், மாமியார், உறவினர் என நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தனுவை அவரது மாமியார் கொலை செய்து வீட்டின் முன் கழிவுநீர் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இரு மாதங்களுக்கு முன் புதைத்தது தெரியவந்தது.
கொலையை மறைக்க, தனு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.