Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தீவிரமடையும் பாரத மாதா சர்ச்சை; பா.ஜ., - இடதுசாரி மாணவர்கள் மோதல்

தீவிரமடையும் பாரத மாதா சர்ச்சை; பா.ஜ., - இடதுசாரி மாணவர்கள் மோதல்

தீவிரமடையும் பாரத மாதா சர்ச்சை; பா.ஜ., - இடதுசாரி மாணவர்கள் மோதல்

தீவிரமடையும் பாரத மாதா சர்ச்சை; பா.ஜ., - இடதுசாரி மாணவர்கள் மோதல்

UPDATED : ஜூன் 22, 2025 05:12 AMADDED : ஜூன் 22, 2025 04:08 AM


Google News
Latest Tamil News
திருவனந்தபுரம்: கேரளாவில், கவர்னர் விழாவில் வைக்கப்பட்ட பாரத மாதா படம் சர்ச்சையை எழுப்பியதை அடுத்து, பா.ஜ., மற்றும் இடதுசாரியினர் பல்வேறு இடங்களில் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளார்.

கவர்னர் மாளிகையில், கடந்த 4ம் தேதி நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில், காவி கொடி ஏந்திய பாரத மாதா படம் வைக்கப்பட்டு இருந்தது. இதனால், நிகழ்ச்சியில் கேரள வேளாண் அமைச்சர் பிரசாத் பங்கேற்கவில்லை.

இந்த சூழலில், கவர்னர் மாளிகையில் சமீபத்தில் நடந்த சாரண - சாரணியர் விழாவிலும், சர்ச்சைக்குரிய வகையில் பாரத மாதா படம் மீண்டும் வைக்கப்பட்டு இருந்தது.

இதனால், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அமைச்சர் சிவன்குட்டி வெளியேறினார். இதையடுத்து, கவர்னருக்கு எதிராக இ.கம்யூ., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான தேசாபிமானி, 'கவர்னர் மாளிகை ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தின் கிளை அல்ல' என, விமர்சித்துள்ளது.

இந்திய மாணவர் கூட்டமைப்பு, இடதுசாரி தொழிற்சங்க அமைப்புகளும் கவர்னருக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளன. கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னரை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி பா.ஜ.,வினர், அமைச்சர் சிவன்குட்டிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினர்.

அவரது உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர். இதை தடுத்த இந்திய மாணவர் சங்கத்தினர், அவர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. இதேபோல், பல இடங்களிலும் மாணவர் அமைப்பினர் மற்றும் பா.ஜ., இடையே மோதல் வெடித்தது.

பாரத மாதா பட விவகாரத்தில் கவர்னர் அரசியலமைப்பு விதிகளை மீறியதாக கூறிய காங்கிரஸ், இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கவர்னர் மற்றும் மாநில அரசு இடையே சுமுகமான சூழல் நிலவிய நிலையில், பாரத மாதா விவகாரம், கேரள அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us