குவாரி மணல் விற்பனை ஊழலை ஈ.டி., விசாரிப்பதில் என்ன பிரச்னை? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
குவாரி மணல் விற்பனை ஊழலை ஈ.டி., விசாரிப்பதில் என்ன பிரச்னை? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
குவாரி மணல் விற்பனை ஊழலை ஈ.டி., விசாரிப்பதில் என்ன பிரச்னை? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
ADDED : பிப் 23, 2024 11:24 PM

புதுடில்லி: தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக மணல் அள்ளி விற்பனை செய்யப்படுவதாகவும், அதில் கிடைத்த பணத்தை சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது.
இதை தொடர்ந்து, தமிழகத்தின் 34 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இது தொடர்பாக தமிழகத்தின் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் 10 கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதை எதிர்த்து அரசு அதிகாரிகள் மற்றும் திருச்சி, தஞ்சாவூர், கரூர், வேலுார், அரியலுார் மாவட்ட கலெக்டர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது; அதே நேரம் விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, நீதிபதி பேலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ''தமிழகத்தின் மணல் குவாரி தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை,'' என்றார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் மாநில அரசு எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? எந்த சட்டத்தின் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானது இல்லையா?
அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவதில் மாநில அரசுக்கு என்ன பிரச்னை? அதில் அவர்களுக்கு என்ன பங்கு?
இந்த கேள்விக்கெல்லாம் எங்களுக்கு விடை அளியுங்கள். பூர்வாங்க விசாரணையை நிறுத்தி வைப்பது குறித்து நாங்கள் பரிசீலிக்கிறோம். ஆனால், விரிவான விளக்கம் தேவை.
இவ்வாறு நீதிபதிகள் சரமாரியாக கேட்டனர்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான முகுல் ரோஹத்கி, ''அமலாக்கத்துறை தங்கள் வரம்பு மீறி செயல்படும்போது, அதற்கு கலெக்டர்கள் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. ரிட் மனு தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து விளக்கம் அளிக்கப்படும்,'' என வாதிட்டார்.
விசாரணை திங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.