Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தாக்குதலால் அச்சத்தில் உறைந்து நின்றோம் ஈரானில் மீட்கப்பட்ட மாணவர்கள் 'திக் திக்'

தாக்குதலால் அச்சத்தில் உறைந்து நின்றோம் ஈரானில் மீட்கப்பட்ட மாணவர்கள் 'திக் திக்'

தாக்குதலால் அச்சத்தில் உறைந்து நின்றோம் ஈரானில் மீட்கப்பட்ட மாணவர்கள் 'திக் திக்'

தாக்குதலால் அச்சத்தில் உறைந்து நின்றோம் ஈரானில் மீட்கப்பட்ட மாணவர்கள் 'திக் திக்'

ADDED : ஜூன் 20, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: “வானில் தொடர்ந்து ஏவுகணைகள் வீசப்பட்டதுடன், அருகே குண்டு சத்தங்களும் இடைவிடாது கேட்டன; நாங்கள் அச்சத்தில் உறைந்து நின்றோம்” என, ஈரானில் இருந்து 'ஆப்பரேஷன் சிந்து' வாயிலாக நேற்று தாயகம் திரும்பிய மாணவர்கள் தெரிவித்தனர்.

சிறப்பு விமானம்


ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இச்சூழலில், ஈரானில் தங்கி பயிலும் இந்திய மாணவர்களை மீட்க, 'ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

'இதற்கான பணிகளை ஈரான், அர்மேனியா மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளில் உள்ள இந்திய துாதரகங்கள் மேற்கொண்டுள்ளன.

முதற்கட்டமாக, ஈரானில் இருந்து, 110 இந்திய மாணவர்கள், பஸ்கள் வாயிலாக அண்டை நாடான அர்மேனியாவின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்து வரப்பட்டனர். பின், அங்கிருந்து சிறப்பு விமானம் வாயிலாக நேற்று முன்தினம் டில்லி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த விமானம் நேற்று காலை டில்லி வந்த நிலையில், வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், நேரில் சென்று மாணவர்களை வரவேற்றார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் கூறுகையில், 'ஆப்பரேஷன் சிந்து வாயிலாக, ஈரானில் வசிக்கும் இந்தியர்களை மீட்க உதவி வரும் அர்மேனியா, துர்க்மெனிஸ்தான் அரசுகளுக்கு நன்றி.

'இந்தியர்கள் பலர், ஈரானில் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. எனவே, அவர்களை மீட்க அதன் அண்டை நாடான துர்க்மெனிஸ்தானிற்கு மற்றொரு விமானம் இன்று அனுப்பப்பட்டுஉள்ளது' என்றார்.

ஆப்பரேஷன் சிந்து வாயிலாக மீட்கப்பட்ட மாணவர்களில் ஒருவரான மிர் காலிப் என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் ஏவுகணை தாக்குதல்களை நேரடியாக பார்த்தோம்; இடைவிடாது குண்டுசத்தங்களை கேட்டோம்.

சிக்கி தவிப்பு


''தாக்குதல்களால், நாங்கள் தங்கியிருந்த கட்டடம் குலுங்கியது. நாங்கள் அச்சத்தில் உறைந்து நின்றோம். இதுபோன்ற சூழலை, வேறு எந்தவொரு மாணவரும் சந்திக்கக்கூடாது.

''இன்னும், பல மாணவர்கள் அங்கு சிக்கித் தவிக்கின்றனர். பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

''விரைவில், சிறப்பு விமானங்கள் வாயிலாக மத்திய அரசு அழைத்து வரும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.

மீட்கப்பட்ட மற்றொரு மாணவர்களில் டில்லியைச் சேர்ந்த அலி அக்பர் கூறுகையில், “நாங்கள் பஸ்சில் வந்தபோது வானில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டதை கண்டோம்; இத்தாக்குதலால், ஈரான் தலைநகர் டெஹ்ரான் அழிந்து வருகிறது. செய்திகளில் வரும் படங்கள், வீடியோக்கள் அனைத்தும் உண்மையானவை; அங்குள்ள நிலைமை மிகவும் மோசமாக உள்ளன,” என்றார்.

டில்லி வந்த 110 இந்திய மாணவர்களில், 90 பேர் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். ஈரானின் உர்மியாவில் உள்ள மருத்துவ அறிவியல் பல்கலையில் பயின்று வந்த இவர்கள் அனைவரையும் டில்லியில் இருந்து ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு பஸ்கள் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே அந்த பஸ்கள், மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். இது, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் கவனத்திற்கு சென்றது. உடனே, சொகுசு பஸ் வாயிலாக அம்மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us