மஹா.,வில் காங்., தலைவரின் காலை கழுவிய தொண்டர்: பா.ஜ., கண்டனம்
மஹா.,வில் காங்., தலைவரின் காலை கழுவிய தொண்டர்: பா.ஜ., கண்டனம்
மஹா.,வில் காங்., தலைவரின் காலை கழுவிய தொண்டர்: பா.ஜ., கண்டனம்
ADDED : ஜூன் 18, 2024 03:43 PM

மும்பை: மஹாராஷ்டிரா மாநில காங்., தலைவர் நானா படோல் காலை தொண்டர் ஒருவர் கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பாஜ., கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
நானா படோல், வடேகான் நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து அங்குள்ள துறவி கஜானன் மஹாராஜ் மடத்தில் தரிசனம் செய்தார். பிறகு, காருக்கு திரும்பும் போது காலில் சகதி பட்டது. நானா படோல், காரில் அமர்ந்த படி காலை வெளியே வைத்தார். அப்போது தொண்டர் ஒருவர், அவரது காலை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதற்கு கண்டனம் தெரிவித்த மும்பை பா.ஜ., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தங்களின் வாழ்க்கைக்காக போராடும் தொண்டரை அவமானப்படுத்தும் காங்கிரசின் செயல் துரதிஷ்டவசமானது. தொண்டரை, தனது காலை கழுவ வைத்தது கண்டனத்திற்குரியது. இது தான் காங்கிரசின் கலாசாரமா எனக் கேள்வி எழுப்பினார்.
பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவாலா வெளியிட்ட அறிக்கையில், நானா படோல் செயல், காங்கிரஸ் இன்னும் நவாப் கால மன நிலையில் இருந்து மாறவில்லை என்பதை காட்டுகிறது. அவர்கள் , மக்களையும் தொண்டர்களையும் அடிமைகள் போலவும், தங்களை அரசர்கள் போலவும் எண்ணிக் கொள்கின்றனர்.
அதிகாரத்தில் இல்லாத போது மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள். நானா படோல் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
விளக்கம்
இந்த நிகழ்வு குறித்து விளக்கமளித்துள்ள நானா படோல், ‛‛ நேற்றைய சம்பவத்தை நான் மறைக்கவில்லை. தொண்டர் எனது காலை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். அங்கு குழாய் ஏதும் இல்லை. அது இருந்து இருந்தால், நானே எனது காலை கழுவி இருப்பேன் '' எனக் கூறியுள்ளார்.