வாகனங்களுக்கான தடை கப்பன் பூங்காவில் நீக்கம்
வாகனங்களுக்கான தடை கப்பன் பூங்காவில் நீக்கம்
வாகனங்களுக்கான தடை கப்பன் பூங்காவில் நீக்கம்
ADDED : பிப் 12, 2024 06:50 AM

பெங்களூரு: கப்பன் பூங்காவில் மாதத்தில் இரண்டு, நான்காவது சனிக்கிழமைகளில், வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடையை, கர்நாடகா அரசு திடீரென நீக்கி உள்ளது.
பெங்களூரு விதான் சவுதா எதிரே கப்பன் பூங்கா உள்ளது. இந்த பூங்கா, பெங்களூரின் இதயம் என்று அழைக்கப்படுகிறது. 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள பூங்காவில் ஏராளமான மரங்கள் உள்ளன. மன அமைதிக்காகவும், பொழுதுபோக்கவும், தினமும் ஏராளமான மக்கள் பூங்காவிற்கு வருகின்றனர்.
பூங்காவின் வழியாக செல்லும் சாலைகளில், வாகன போக்குவரத்துக்கு அனுமதி உள்ளது. ஆனால் மாதத்தின் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அந்த தடையை, கர்நாடகா அரசு திடீரென நீக்கி உள்ளது. அதாவது சித்தலிங்கய்யா சதுக்கம் முதல் உயர்நீதிமன்றம் வரை உள்ள சாலையில், போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது, பூங்காவிற்கு வருவோர் இடையே, அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து இணை கமிஷனர் அனுசேத் கூறுகையில், ''மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகள், கப்பன் பூங்காவுக்குள் உள்ள சாலைகள் வழியாக செல்ல, வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
''இதையடுத்து, வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி, தோட்டக்கலை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். இதற்கு அரசும் ஒப்புக்கொண்டது. மூன்று மாதங்கள் சோதனை அடிப்படையில், வாகனங்களுக்கு அனுமதி அளித்து உள்ளோம்,'' என்றார்.