திறமைக்கு மரியாதை: யு.பி.எஸ்.சி., புதிய திட்டம்
திறமைக்கு மரியாதை: யு.பி.எஸ்.சி., புதிய திட்டம்
திறமைக்கு மரியாதை: யு.பி.எஸ்.சி., புதிய திட்டம்
ADDED : ஜூன் 20, 2025 01:03 AM

புதுடில்லி: யு.பி.எஸ்.சி., இறுதித்தேர்வு வரை வந்து நேர்முகத்தேர்வுக்கு முன்னேற முடியாதவர்களை மத்திய அரசின் பிற துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர்பதவிகளில் பணியமர்த்தும் வகையில், 'பிரதிபா சேது' என்ற திட்டத்தை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., மற்றும் ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட 24 வகையான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. சிவில் சர்வீசஸ் பணி தேர்வுக்கு, ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர்.
முதன்மை தேர்வு, மெயின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தேர்ச்சி பெறுவோர், இறுதியாக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். அதில் தேர்ச்சி பெற்றால்தான் நாட்டின் உயரிய பதவிகளை அலங்கரிக்க முடியும்.
இரவுபகலாக படித்து தேர்வு எழுதிய பெரும்பாலானோர் யு.பி.எஸ்.சி., நேர்முகத்தேர்வில் தோல்வியடைந்து விடுகின்றனர்.
அதிலும் பலர், யு.பி.எஸ்.சி., நிர்ணயித்த வயதைக் கடந்துவிடுவதால், மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பை இழக்கின்றனர். இந்த நிலையில், யு.பி.எஸ்.சி., இறுதித்தேர்வு வரை வந்து தோல்வி அடைந்தவர்களுக்கு மாற்று வாய்ப்பு அளிக்கும் விதமாக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், 'பிரதிபா சேது' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ், முதன்மை தேர்வு, பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களை மத்திய அமைச்சகங்களின் பல்வேறு துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் பணியமர்த்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதுதவிர தனியார் நிறுவனங்களிலும், மேலாண்மை பதவிகளில் அவர்களை பணியமர்த்த அனுமதிக்கிறது.
அனைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெற்றும் நேர்முக தகுதிப்பட்டியலில் இடம் பெறாத, 10,000க்கும் மேற்பட்டோரின் விபரங்கள், 'பிரதிபா சேது' திட்ட இணையதளத்தில் உள்ளது.
அதற்கான உள்நுழைவு ஐ.டி.,க்களை தனியார் நிறுவனங்களுக்கும் யு.பி.எஸ்.சி., வழங்குகிறது. இதை பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் துறையினரும் திறமையான ஊழியர்களை உயர்பதவிகளில் நியமித்துக்கொள்ளலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.