தலைமையுடன் கருத்து வேறுபாடு: மனம் திறந்தார் காங்., - எம்.பி., தரூர்
தலைமையுடன் கருத்து வேறுபாடு: மனம் திறந்தார் காங்., - எம்.பி., தரூர்
தலைமையுடன் கருத்து வேறுபாடு: மனம் திறந்தார் காங்., - எம்.பி., தரூர்
ADDED : ஜூன் 20, 2025 12:53 AM

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைமையுடன் தனக்கு கருத்து வேறுபாடு உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்த புரம் எம்.பி.,யுமான சசி தரூர், முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தை சேர்ந்த திருவனந்தபுரம் காங்., எம்.பி., சசி தரூர், சொந்த கட்சியையே அவ்வப்போது விமர்சித்து வருகிறார். இது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுவதால், காங்., தலைமை எரிச்சல் அடைந்தது.
பாக்., பயங்கரவாத ஆதரவு குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு சமீபத்தில் அமைத்த எம்.பி.,க்கள் குழுவில் சசி தரூரும் இடம் பெற்றார். காங்., தலைமையின் எதிர்ப்பை மீறி, அந்த குழுவில் அவர் இடம் பெற்றார். இது, தரூருக்கும், கட்சி தலைமைக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.
இருப்பினும், இதுகுறித்து சசி தரூர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் இருந்தார். தற்போது முதன்முறையாக அது பற்றி வாய் திறந்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் சசி தரூர் நேற்று கூறியதாவது:
கட்சி தொண்டர்களுடன் கடந்த, 16 ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். அவர்களை நெருங்கிய நண்பர்களாக, சகோதரர்களாகவே பார்க்கிறேன். ஆனால், தலைமையுடன் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. சில பிரச்னைகளை பொதுவெளியிலேயே பேசுகிறேன் என்பது உங்களுக்கே தெரியும்.
வயநாடு இடைத்தேர்தல் உட்பட மற்ற இடைத்தேர்தல்களை போல, நிலம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கும் எனக்கு அழைப்பு இல்லை. அழையாத வீட்டிற்கு விருந்தாளியாக செல்வதில்லை.
தேசத்திற்கு ஒரு பிரச்னை வரும்போது, நாம் அனைவரும் நாட்டிற்காக ஒன்றுசேர கடமைப்பட்டுள்ளோம். 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின்போது நான் சொன்னது என் சொந்தகருத்து.
மத்திய அரசு என் சேவைகளை கேட்டது. உண்மையில், என் கட்சி அதை கேட்கவில்லை. எனவே, ஓர் இந்திய குடிமகனாக என் கடமையை நான் பெருமையுடன் செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமையுடன் கருத்து வேறுபாடு என்று அவர் கூறியது, மாநில தலைமையா அல்லது தேசிய தலைமையா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.