ADDED : ஜூன் 14, 2025 09:09 PM
புதுடில்லி:கொலை முயற்சி வழக்கில், போலீஸ் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்கத் தவறியதால், இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஹஸ்ரத் நிஜாமுதீனில் வசிக்கும் முஹமது ஷபீக், முஹமது ரஷீத் மற்றும் பிரோஸ் ஆகிய மூவர் மீது, 2018ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி அபிஷேக் மற்றும் மோனு ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு முவரும் காயம் அடைந்தனர்.
புகாரின் பேரில், ஹஸ்ரத் நிஜாமுதீன் போலீசார், மோனு மற்றும் அபிஷேக் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, கூடுதல் அமர்வு நீதிபதி கீதாஞ்சலி முன் விசாரணைக்கு வந்தது.
அபிஷேக்கிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டா, மோனுவிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் ஆயுதங்களை சமர்ப்பித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். புகார்தாரர்களான முஹமது ஷபிக் உட்பட மூவரும் குற்றவாளிகளை அடையாளம் காட்டவில்லை.
இதையடுத்து, சந்தேகத்துக்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்கத் தவறியதால், அபிஷேக் மற்றும் மோனு இருவரையும் விடுதலை செய்து நீதிபதி கீதாஞ்சலி உத்தரவிட்டார்.