100ஐ 200 ஆக மாற்றுங்கள்! தொண்டர்களுக்கு விஜயேந்திரா அறிவுரை
100ஐ 200 ஆக மாற்றுங்கள்! தொண்டர்களுக்கு விஜயேந்திரா அறிவுரை
100ஐ 200 ஆக மாற்றுங்கள்! தொண்டர்களுக்கு விஜயேந்திரா அறிவுரை
ADDED : பிப் 24, 2024 05:18 AM

பெங்களூரு, : “நமக்கு கிடைக்கும் 100 ஓட்டுகளை 200 ஓட்டுகளாக மாற்றுங்கள்,” என, பா.ஜ., தொண்டர்களுக்கு, மாநில தலைவர் விஜயேந்திரா அறிவுரை கூறி உள்ளார்.
பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில் மாநிலத் தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:
நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுதும், நமது பிரதமர் மோடி பாராட்டப்படுகிறார். இதை காங்கிரஸ்காரர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாட்டின் நலன், பாதுகாப்பிற்காக பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென, மக்கள் விரும்புகின்றனர்.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 இடங்களிலும் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கவலையில் உள்ளனர். ஊழல், ஆணவமிக்க காங்கிரஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. பா.ஜ., தொண்டர்கள் லோக்சபா தேர்தல் வெற்றிக்காக, இரவு, பகலாக உழைக்க வேண்டும். வேட்பாளர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றி பெற வைப்பது, உங்கள் பொறுப்பு.
பிரதமர் மோடியின் திட்டங்கள், அவரது பெருமையை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். நமக்கு ஒரு இடத்தில் 100 ஓட்டுகள் கிடைக்கும் என்றால், அதை 200ஆக மாற்ற வேண்டும். லோக்சபா தேர்தல் முடிவுகள் பொன் எழுத்துகளில் பொறிக்கப்படும். மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்பது உண்மை.
ஆட்சிக்கு வந்த ஒன்பது மாதங்களில், கர்நாடகாவில் காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. வளர்ச்சி தொடர்பான எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, வடமாவட்டங்களில் 7,800 கோடி ரூபாய் செலவில், பாசன திட்டத்தை மேற்கொள்ள ஒப்புதல் அளித்தது. ஆனால் காங்கிரஸ் இன்னும் செயல்படுத்தவில்லை. அரசின் கருவூலத்தில் பணம் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.