Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திரிணமுல் தொண்டர்கள் தாக்குதல்

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திரிணமுல் தொண்டர்கள் தாக்குதல்

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திரிணமுல் தொண்டர்கள் தாக்குதல்

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திரிணமுல் தொண்டர்கள் தாக்குதல்

ADDED : ஜன 06, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
கோல்கட்டா, மேற்கு வங்கத்தில், ரேஷன் வினியோக ஊழல் வழக்கு தொடர்பாக, திரிணமுல் காங்., பிரமுகர் ஷேக் ஷாஜஹான் வீட்டில் சோதனையிடச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளை, கட்சி தொண்டர்கள் கொடூரமாக தாக்கியதில் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.

இவரது அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர், ஜோதிப்ரியோ மாலிக், 65. கடந்த திரிணமுல் காங்., ஆட்சியில் இவர் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த போது, ரேஷன் வினியோகத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அமைச்சர் ஜோதிப்ரியோ மாலிக் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான, 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள திரிணமுல் காங்., பிரமுகர் ஷேக் ஷாஜஹான் வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் சென்றனர். வாயிலில் இருந்த இரும்பு, 'கேட்' பூட்டப்பட்டு இருந்தது.

நீண்ட நேரம் காத்திருந்தும் உள்ளே இருந்த ஷாஜஹான் கதவுகளை திறக்கவில்லை. இதனால், அமலாக்கத்துறையினர் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த திரிணமுல் காங்., தொண்டர்கள், அமலாக்கத்துறையினரை தாக்கினர். அவர்களுடன் வந்திருந்த பாதுகாப்பு படையினரையும் கடுமையாக தாக்கினர்.

அவர்கள் வந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கொடூர தாக்குதலில், இரண்டு அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தை விட்டு, ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் அமலாக்கத்துறையினர் தப்பிச் சென்றனர்.

அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். அவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடந்த போது, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யை அமலாக்கத்துறையினர் தொடர்பு கொண்ட போது, அவர் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

அமலாக்கத்துறையினரிடம் இருந்து அதிகாரப்பூர்வ புகார் வந்த பின், தாக்குதலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.

மோசமான முன் உதாரணம்!

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திரிணமுல் காங்., கட்சியினர் தாக்குதல் நடத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாது; இது ஒரு மோசமான முன் உதாரணம். இந்த விஷயத்தில் சட்டத்துக்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதை கண்டிப்பாக எடுப்பேன்.

அனந்த போஸ், மேற்கு வங்க கவர்னர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us