ராஜமலையில் வரையாடுகளை பார்க்க குவிந்த சுற்றுலா பயணிகள்
ராஜமலையில் வரையாடுகளை பார்க்க குவிந்த சுற்றுலா பயணிகள்
ராஜமலையில் வரையாடுகளை பார்க்க குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜன 29, 2024 12:18 AM

மூணாறு: 'இரவிகுளம் தேசிய பூங்கா பிப்., 1 முதல் மூடப்படுவதால் அதற்கு முன் வரையாடுகளைக் காண வேண்டும்' என்ற நோக்கத்தில் கடந்த மூன்று நாட்களாக ராஜமலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடு ஏராளமாக உள்ளன. அவற்றைக் காண பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.
வரையாடுகளின் பிரசவ காலங்களில் பூங்கா மூடப்பட்டு ராஜமலைக்கு பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்படும். இங்கு வரையாடுகள் பிரசவிக்க துவங்கியதால் பிப்., 1 முதல் மார்ச் 31 வரை பூங்கா மூடப்பட்டு ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குவிந்தனர்
இந்நிலையில் குடியரசு தினம், சனி, ஞாயிறு விடுமுறை என தொடர் விடுமுறையில் கடந்த மூன்று நாட்களாக மூணாறில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பூங்கா மூடும் முன் வரையாடுகளை காண வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜமலைக்கு படை எடுத்தனர். அதனால் அதன் நுழைவு பகுதியான ஐந்தாம் மைலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராஜமலைக்கு தினமும் சராசரியாக 2800 பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்த நடைமுறை கடைபிடிக்கப் பட்டதால் பெரும்பாலானோர் ராஜமலைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.