வடகிழக்கில் கொட்டி தீர்க்கும் மழை 40 பேர் பலி; 10 லட்சம் பேர் பாதிப்பு
வடகிழக்கில் கொட்டி தீர்க்கும் மழை 40 பேர் பலி; 10 லட்சம் பேர் பாதிப்பு
வடகிழக்கில் கொட்டி தீர்க்கும் மழை 40 பேர் பலி; 10 லட்சம் பேர் பாதிப்பு
ADDED : ஜூன் 06, 2025 12:01 AM

குவஹாத்தி: அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை கனமழை புரட்டிப் போட்டுள்ள நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.
அசாமின் வெள்ள நிலைமை மோசமாகவே உள்ளது. அங்குள்ள, 21 மாவட்டங்களில், ஏழு லட்சம் பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு
அந்த மாநிலத்தில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
பிரம்மபுத்திரா, பராக் உள்ளிட்ட ஒன்பது முக்கிய நதிகளும், அதன் துணை நதிகளும் அபாய கட்டத்தை தாண்டி பாய்கின்றன. 66 வருவாய் வட்டங்களில் 1,494 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
அதில் ஸ்ரீபூமி மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, 15,000 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஐந்து லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள், விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 405 வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று அருணாச்சல பிரதேசத்தில், 24 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 33,000 பேர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
சிக்கி தவிப்பு
சிக்கிமில் கடந்த மாதம், 29 முதல் தொடர்ந்து பெய்த மழையால் மங்கன், பிடாங், சாட்டன், லாச்சன் உள்ளிட்ட பகுதி களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பல பாலங்கள் சேதமடைந்தன. பல்வேறு மாவட்டங்களில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன், லாச்சுங் மற்றும் சுங்தாங் நகரங்களில் 1,678 சுற்றுலா பயணியர் சிக்கித் தவித்தனர்.
அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, டிசோங்கு நகரத்திற்கு அருகிலுள்ள பிடாங் வழியாக காங்டாக்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றும், வடக்கு சிக்கிமின் லாச்சுங்கில் ஒரு வாரமாக சிக்கித் தவித்த 63 சுற்றுலா பயணியர் இரண்டு ஹெலிகாப்டர்களில் மீட்கப்பட்டனர்.
அங்கிருந்து மீட்கப்பட்டவர்கள், ஹோட்டல்களிலும் சாட்டன் ராணுவ முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.