எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு எச்சரிக்கை
எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு எச்சரிக்கை
எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு எச்சரிக்கை

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டதாக தெரிவித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, ''எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு,'' என, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தம்பட்டம்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்தார். இதை மத்திய அரசு மறுத்தது.
மத்திய பிரதேசத்தின் போபாலில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுகையில், 'அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இருந்து அழைப்பு வந்ததும், உடனடியாக பிரதமர் மோடி சரணடைந்து விட்டார்' என்றார். இதற்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ராகுலின் இந்த பேச்சை, பாக்., ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. மேலும், அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்பும், சரணடைந்து விட்டதாக இந்தியா ஒப்புக் கொண்டதாக உளறினார்.
இந்த விவகாரம் தேசிய அரசியலில் புயலைக் கிளப்பிய நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, டிரம்ப் அணிந்த சிவப்பு நிற தொப்பியை, சமூக வலைதளத்தில், காங்., வெளியிட்டது. அதில், 'நரேந்திரர் சரணடைந்தார்' என்ற வாசகம் இருந்தது.
முட்டாள்தனம்
இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகாரத்துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு நேற்று கூறுகையில், ''முட்டாள்தனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஓர் எல்லை உண்டு. எதிர்க்கட்சி என்பது, நாட்டை எதிர்ப்பதற்கு அல்ல என்பதை ராகுலிடம் சொல்ல, காங்கிரசில் ஒருவர் கூட இல்லையா?'' என்றார்.