ராஜஸ்தானில் ஊருக்குள் புலிகள்: 2 மாதங்களில் மூன்று பேர் பலி
ராஜஸ்தானில் ஊருக்குள் புலிகள்: 2 மாதங்களில் மூன்று பேர் பலி
ராஜஸ்தானில் ஊருக்குள் புலிகள்: 2 மாதங்களில் மூன்று பேர் பலி
ADDED : ஜூன் 12, 2025 11:29 PM

ராஜஸ்தானின் மதோபூர் மாவட்டத்தில் சவாய் பகுதியில் ரந்தம்போர் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தை ஒட்டிய பழைய கோட்டையில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
காப்பகத்தை ஒட்டிய சுவர்கள் இடிக்கப்பட்டு, சரியாக மூடப்படாததால், அங்கிருந்து புலிகள் தப்பி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது தொடர்கதையாக உள்ளது.
அவ்வாறு வந்த புலி ஒன்று, அங்குள்ள ஜெயின் கோவில் காவலாளி ராதேஷ்யாம் மாலி, 70, என்பவரை அடித்துக் கொன்றுள்ளது. காவலாளியின் அலறல் சத்தம் கேட்டு, பணியில் இருந்த பிற காவலாளிகள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். இதையடுத்து, புலி அங்கிருந்து தப்பிச் சென்றது.
புலியின் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் நடந்த பகுதியில் அவர்கள் குவிந்தனர்.
சவாய் மற்றும் புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுபோன்ற துயரச் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக கூறிய கிராம மக்கள், மனிதர்களின் உயிரிழப்புக்கு வனத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளே காரணம் என குற்றஞ்சாட்டினர்.
முதற்கட்ட விசாரணையில், ரந்தம்போர் புலிகள் காப்பகத்தில் உள்ள 'ஆரோஹெட்' என அழைக்கப்படும் புலியின் குட்டிகளே இந்த தாக்குதலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புலிக்கு பிறந்த 1 வயதுக்கும் குறைவான குட்டிப்புலியே, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து காவலாளி மாலியை கொன்றதும் தெரிய வந்துள்ளது. முன்னதாக, இந்த புலியின் மற்றொரு குட்டியான 'அன்வி' கடந்த ஏப்., 16 மற்றும் மே 11ம் தேதிகளில் சிறுவன் மற்றும் வனத்துறை அதிகாரியை கொன்றது.
இந்த சூழலில், மற்றொரு குட்டியும் மனித வேட்டையில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்வி புலிக்குட்டி, வனத்துறையினரால் ஏற்கனவே பிடிக்கப்பட்டு மற்றொரு காட்டுப்பகுதியில் விடப்பட்ட சூழலில், மற்றொரு புலிக்குட்டியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரந்தம்போர் புலிகள் காப்பகத்தை சுற்றி ஏராளமான கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ளதால், இங்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியரின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
அதேசமயம், புலிகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளதால், அதை உடனடியாக பிடிக்க, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேசமயம், புலிகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளதால், அதை உடனடியாக பிடிக்க, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -