ADDED : ஜூன் 12, 2025 11:32 PM
நாராயண்பூர்: சத்தீஸ்கரில், 19 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட மூன்று நக்சல்கள் பாதுகாப்பு படையினர் முன் சரணடைந்தனர்.
சத்தீஸ்கரின் கிழக்கு பஸ்தார் டிவிஷன் மாவோயிஸ்ட் குழு உறுப்பினர் பீமா, 40. இவரை பிடித்துக் கொடுத்தால், 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் அபுஜ்மாட் மற்றும் பர்தாபூர் பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த இருவேறு மாவோயிஸ்ட் பிரிவு பெண் நக்சல்களான சுக்லி மற்றும் தேவ்லி மாண்டவி ஆகியோரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, 8 லட்சம், ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த 10ம் தேதி சுக்லி மற்றும் தேவ்லி ஆகிய இரு பெண் நக்சல்களும் நாராயண்பூர் பகுதியில் உள்ள மூத்த போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முன் சரண் அடைந்தனர். நக்சல் பீமா நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.
இவர்கள் சரண் அடைந்ததில் நாராயண்பூர் போலீசார், இந்தோ - திபெத் எல்லை போலீசார், மற்றும் எல்லை பாதுகாப்பு படை போலீசாருக்கு முக்கிய பங்கு உண்டு.
மனிதாபிமானமற்ற மாவோயிஸ்ட்களின் வெற்று சித்தாந்தத்தால் ஏமாற்றமடைந்தும், பாதுகாப்பு படையினரின் நெருக்கடி அதிகரித்ததாலும் சரண் அடைந்ததாக மூன்று நக்சல்களும் தெரிவித்தனர்.
சரணடைந்த நக்சல்களுக்கு மாநில அரசு 50,000 ரூபாய் உடனடி உதவித்தொகை வழங்கியதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இப்போது சரணடைந்த மூவரையும் சேர்த்து இந்த ஆண்டு மட்டும் நாராயண்பூர் மாவட்டத்தில், சி.பி.ஐ., மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து 104 நக்சல்கள் வெளியேறி போலீசில் சரண் அடைந்துள்ளனர்.