10 காலி பணியிடங்களுக்கு திரண்ட ஆயிரக்காணக்கான இளைஞர்கள்!
10 காலி பணியிடங்களுக்கு திரண்ட ஆயிரக்காணக்கான இளைஞர்கள்!
10 காலி பணியிடங்களுக்கு திரண்ட ஆயிரக்காணக்கான இளைஞர்கள்!
ADDED : ஜூலை 12, 2024 06:55 AM

ஆமதாபாத் : குஜராத்தில் தனியார் நிறுவனத்தில் 10 பணியிடங்களுக்கான நேர்காணலில் பங்கேற்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத்தில் பரூச் மாவட்டத்தின் ஜஹாடியாவில் உள்ள பொறியியல் நிறுவனத்தில், 10 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், அதற்கு கடந்த 8ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்றும், அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதையடுத்து அன்றைய தினம், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த நிறுவனத்திற்குள் முண்டியடித்து செல்ல முயன்றனர்.
எதிர்பாராதவிதமாக, அங்குள்ள தடுப்பு கம்பி, பாரம் தாங்காமல் கீழே விழுந்தது. இதனால், அங்கு நின்றிருந்த இளைஞர்கள், சரிந்து விழுந்ததில் பலர் காயமடைந்தனர். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், 'நம் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை எடுத்துக்காட்டும் வகையில் இது அமைந்துள்ளது' என, குறிப்பிட்டனர். எனினும், இதற்கு பரூச் பா.ஜ., எம்.பி., மன்சூக் வாசவா கூறுகையில், “பரூச் மாவட்டம், மினி இந்தியா போன்றது.
நம் நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து தங்கியுள்ளனர். ஆனால், காலிப்பணியிடங்களை அறிவித்த சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அதற்குரிய தகுதிகளை முறையாக வெளியிடவில்லை. இதனால் தான் அந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிய காரணமாக அமைந்தது,” என்றார்.